தொல்காப்பியர் வடசொல் எனத் தழுவிக் கொண்டார் என்பது இளம் பூரணர் கருத்தாம். ஆதி வடசொல் என்பது வடவெழுத்து முறையை நீக்கித் தமிழ் எழுத்து முறை பெற்ற (வட) சொற்களாம். மாத்தா, பித்தா என்பன மாதா, பிதா எனத் தமிழ் உருப் பெற்றன. ராமா, சீத்தா என்பன இராமன், சீதை என உருப்பெற்றன. இவ்வாறு தமிழ் வடிவில்வரும் வடமொழிச்சொற்கள் வடசொல் எனப்படும். சுப் இச்சூத்திரவுரையிற் சேனாவரையர், “வடசொல்லாவது வடசொல்லோ டொக்கும் தமிழ்ச்சொல் என்றாரால் உரையாசிரியர் எனின்,” என்று கூறி, “அற்றன்று; ஒக்கும் என்று சொல்லப்படுவன ஒருபுடையான் ஒப்புமையும் வேற்றுமையும் உடைமையான் இரண்டாகல் வேண்டும். இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒரு சொல் லிலக்கணம் உடைமையான் இரண்டு சொல் எனப்படா; அதனான் ஒத்தல் யாண்டையது? ஒரு சொல்லேயாம் என்பது” என்று அவரை மறுத்தனர். இச்சூத்திரவுரையில் உரையாசிரியர் அவ்வாறு கூறவில்லை. ‘இயற்சொல் திரிசொல்’ (897) என்ற சூத்திரவுரையில் ‘வடசொல் என்பது ஆரியச் சொற்போலுஞ் சொல்’ என்று கூறியுள்ளார். ஆயினும் அவருடைய கருத்து சேனாவரையர் கருதியவாறே என்பது இச்சூத்திரவுரையிலுள்ள “குங்குமம் என்ற விடத்து இருசார்க்கும் பொது வெழுத்தினான் வருதலுடைமையும் ஆரியத்தானும் தமிழானும் ஒரு பொருட்கே பெயராகி வழங்கி வருதலுடைமையும் அறிக” என்ற சொற்றொடரால் அறியப்படுகின்றது. இளம்பூரணத்தில் உலகம், நற்குணம் என்பனவும், நச்சினார்க்கினியத்தில் காரியம், உற்பலம் என்பனவும், இச்சூத்திரத்துக்கு உதாரணமாகக் காட்டப்பட்டன. அவை மேல் வருஞ் சூத்திரத்துக்குத்தான் உதாரணமாம். அதனால் |