பக்கம் எண் :

360தொல்காப்பியம்-உரைவளம்

சென்மோ வாழி தோழி பன்னாட்
கருவி வானம் பெய்யா தாயினும்
அருவி யார்க்கும் கழைபயில் நனந்தலை
வான்தோய் மாமலைக் கிழவனைச்
சான்றோ யல்லை யென்றனம் வரற்கே       (நற். 365)

என்றவழிச் ‘செல்வேமோ’ எனற் பாலது ‘சென்மோ’ என வந்தது. பிறவும் அன்ன.

இச் சூத்திரத்திற்குப் பிறவாற்றாற் பொருள் உரைப்பவால் எனின், வினைச் சொல் திரிபு அதிகாரப்பட்டு வருதலானும், காலத்துப்படினே என்றமையானும் பிறவாற்றான் உரைப்பது பொருளன் றென்க.

நச்

இது காலந்தோறும் புதிதாகத் தோன்றிய சொற்களும் கொள்க என்கின்றது.

இ-ள் : கடி சொல் இல்லை - இவை தொன்று தொட்டு வந்தன வல்ல என்று கடியப்படும் சொற்கள் இல்லை, காலத்தொடு படினே - அவ்வக் காலத்துத் தோன்றி நன்மக்கள் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வழங்கப்பட்டு வருமாயின், எ-று.

உ-ம் : சட்டி, சள்ளை, சமை எனவும்

‘சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே’

தையலாய் சமழா துரையென்றதே (சீவக. 1000) எனவும் சகரம் மொழிக்கு முதலாய் வந்தவாறு காண்க. இவை.

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஒளவெனும் மூன்றலங் கடையே       (மொழிமரபு. 29)

என ஆசிரியர் விலக்கலின், அக்காலம் மொழிக்கு முதலாகாது விலக்கிய சகரம் பிற்காலத்து வழங்கிய தாயிற்று.

ஞெண்டு (குறுந். 117) என்பது ஞண்டு ஆய்ப் பின்னர் நண்டு என மரீஇயிற்று.