பக்கம் எண் :

364தொல்காப்பியம்-உரைவளம்

பெயர்ச்சொல் என்றவாறு. அக்குறைக்கப் பெறுவன அம்மூன்றிடத்துள் எவ்விடத்துக் குறைக்கப் பெறினும் பெறுக.

பெற்றன குறையாதபோது நின்ற தத்தம் நிறைபு நிலைப் பெயரவேயாக வுணரப்படும் என்பார், ‘நிறைப் பெயரியல் என்றார் என்பது. இதுவும் ஒரு கருத்து.

சேனா

(குறைச்சொற்....................அறிதல்)

இ-ள் : குறைக்குஞ் சொல்லைக் குறைக்கும் இடமறிந்து குறைக்க, எ-று.

‘குறைக்கும் வழியறிக’ என்பது ஒரு சொற்குத் தலையும் இடையும் கடையும் என இடம் மூன்றன்றே; அவற்றுள் இன்னுழிக் குறைக்கப்படும் இச்சொல் என்றறிந்து குறைக்க என்றவாறு.

உ-ம் : ‘தாமரை’ என்பது ‘மரையிதழ் புரையும் அஞ்செஞ்சீறடி’ எனத் தலைக் கண்ணும், ‘ஓந்தி’ என்பது ‘வேதின வெரிநின் ஓதி முது போத்து’ (குறுந். 140) என இடைக்கண்ணும், ‘நீலம்’ என்பது ‘நீலுண் துகிலிகை கடுப்ப’ எனக் கடைக் கண்ணும் குறைக்கப்பட்ட வாறும், அவை பிறாண்டுக் குறைத்தற் கேலாமையும் கண்டுகொள்க. குறைத்தலாவது ஒரு சொல்லிற் சிறிது நிற்பச் சிறிது கொடுத்தலாதலின் முழுவதும் கெடுதலாகிய தொகுக்கும் வழித் தொகுத்தலின் வேறாதல் அறிக.

இயற்சொற்றிரிசொல் (சொல். 397) என்னுஞ் சூத்திரம் முதலாயின செய்யுளதிகாரத்துக் கூறாமையானும் ஒரு காரணத்தாற் கூறினாரேனும் செய்யுட்கண் என்று விதந்து கூறாமையானும் இது வழக்கு முடிபு என்பாரும் உளர்.

(குறைத்தன.........................................பெயரியல)

இ-ள் : குறைத்தனவாயினும் அவை குறையாது நிறைந்து நின்ற பெயரியல்புடைய, எ-று.

என்றது, முற்கூறிய உதாரணங்கள் தாமரை, ஓந்தி, நீலம் என நிறைந்த பெயர்களில் பொருள்களைத் தந்தே நிற்கும் என்றவாறாம்.