பக்கம் எண் :

366தொல்காப்பியம்-உரைவளம்

இ-ள் : குறைச்சொற் கிளவி-குறைக்கப்படும் சொல்லாகிய சொற்கள், குறைக்கும்வழி அறிதல்-குறைக்கும் இடம் அறிந்து குறைக்க, எ-று.

‘குறைக்கும் வழி அறிதல்’ என்றது ஒரு சொற்குத் தலை இடை கடை என இடம் மூன்றே; அவற்றுள் ‘இன்னுழிக்குறைக்கப்படும் இச்சொல்’ என்று அறிந்து குறைக்க என்றவாறாம்.

உ-ம் : ‘மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி’ எனவும், ‘வேதின வெரிநின் ஓதி முதுபோத்து’ எனவும், ‘நீலுண்துகிலிகை கடுப்பப் பலவுடன்’ எனவும் மூன்று இடத்தும் குறைந்தவாறு காண்க.

இது ஒரு சொல்லின்கண் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தல் ஆதலின் முழுவதும் கெடுத்தலாகிய தொகுக்கும் வழித் தொகுத்தலின் வேறாதல் அறிக.

குறைச் சொற்கிளவி எனவே இவ்விதி செய்யுட்கண் என்பது பெறுதும். 1இது ‘பொருளிடையிடுதல்’ என்னும் உத்தியாம்.

(குறைத்தன....................பெயரியல்)

இது மேலதற்கு ஓர் புறனடை.

இ-ள் : குறைத்தன ஆயினும்-செய்யுளகத்துச் சொற்கள் குறைக்கப்பட்டன ஆயினும், நிறைப்பெயர் இயல - அவை பொருள் உணர்த்தும் வழி நிறைந்து நின்ற பெயரின் இயல்பை யுடையவாம், எ-று.

என்றது முற்கூறிய உதாரணங்கள் தாமரை, ஓந்தி, நீலம் என நிறைந்த பெயரின் பொருள்களைத் தந்தே நிற்கும் என்றவாறாம்.


1. இச்சூத்திரத்தை விகாரம் நோக்கி, “அந்நாற் சொல்லும் தொகுக்குங் காலை வலிக்கும் வழி வலித்தலும்” (எச்-7) என்னும் சூத்திரத்தின் பின்வையாது ஈண்டு வைத்தது பொருள் இடையிடுதல் என்னும் உத்தி.