இடைச்சொல் வேற்றுமைச்சொல் சூ. 58 | 371 |
ஊர்தி வால்வெள் ளேறே” (புறம். 1). என்புழி, கொன்றையையும் ஏற்றையும் இடைவந்த சொற்கள் விசேடித்து வந்தன. ‘ஈர்ந்தையோனே பாண்பசிப் பகைஞன்’ (புறம் 180) என்புழி ‘ஈர்ந்தையோன்’ என்னும் முற்றிற்கு முடிபாகிய ‘பகைஞன்’ என்னும் பெயரை இடையில் நின்ற சொல் விசேடித்து நின்றது. “இழிபிறப்பினோன் ஈயப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையும்” (புறம் 363) என்புழி ‘பெற்று’ என்னும் செய்தென் எச்சத்திற்கு முடிபாகிய ‘மிசையும்’ என்னும் வினையை இடைநின்ற சொற்கள் விசேடித்து நின்றன. ஏந்தெழில் மழைக்கண் இளையோன் மடுப்பத் தேம்பாய் தேறல் நீசிறி துணினே என்புழி ‘மடுப்ப’ என்னும் செயவென் எச்சத்திற்கு முடிபாகிய ‘உணின்’ என்னும் வினையை இடைநின்ற சொற்கள் விசேடித்து நின்றன. ‘வெற்பர் ஆடும் வெற்புச்சேர் இருக்கை பயம்பிற் கொள்ளாப் பைங்கண் யானை’ என்புழி, செய்யும் என்னும் பெயரெச்சத்திற்கும் அதன் மறைக்கும் முடிபாகிய இருக்கையையும் யானையையும் இடை வந்த சொற்கள் விசேடித்து நின்றன. ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’ (அகம்.4) ‘நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய’ (புறம். 19) என்புழி, செய்தவென்னும் பெயரெச்சங்கட்கு முடிபாகிய புரவியையும் செழியனையும் இடைவரும் சொற்கள் விசேடித்து நின்றன. சான்றோர் செய்யுட்கண் இங்ஙனம் அச்சொற்களை விசேடித்து வருதல் பெரும்பான்மை யென்று உணர்க. பண்பும் உடைமையும் முதலிய இடைவந்தால் அவை விசேடித்து நிற்குமாறும் உணர்க. |