இனி, ‘இடைச்சொற்கள் எல்லாம் தாம் அடைந்த பெயர் வினைகளின் பொருள்களை வேறுபடுத்தி நிற்றலின், வேற்றுமைச்சொல் என்று சொல்லப்படும்’ என்று பொருள் கூறினாரால் உரையாசிரியர் எனின், அவை வேறுபாடு செய்தல் அவ்வோத்திற் கூறிய சூத்திரங்களின் பொருளான் ஆண்டுப் பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் ‘கூறியது கூறல்’ ஆம் ஆகலின், அது பொருந்தா தென்க. ‘கூரியதோர் வாள்மன்’ என்புழித்திட்பம் இன்று என்பது வாளை வேறுபடுத்தினவாறு அச்சூத்திரத்தால் பெற்றாம். பிறவற்றையும் இவ்வாறே கொள்க. இனிச் சேனாவரையர், ‘இடைச் சொல் எல்லாம் விசேடித்து நிற்கும்’ என்றாரால் எனின், ‘கொன்னூர் துஞ்சினும்’ (குறுந். 138) ‘கொன்னே கழிந்தன் றிளமையும்’ (நாலடி 55) என்றாற்போல்வன சில இடைச்சொற்கள் விசேடித்தல் அன்றி, எல்லா இடைச்சொற்களும் விசேடித்து நில்லாமை ஆண்டு அவர் காட்டிய உதாரணங்களை நோக்கி யுணர்க. வெள் இஃது இடைச்சொற்கண் எஞ்சி நின்றதோர் பொருளுணர்ச்சி கூறுகின்றது. இ-ள் : இடைச்சொற்கள் எல்லாம் தாம் அடைந்த பெயர் வினைகளின் பொருள்களை வேறுபடுத்தி நிற்றலின் வேற்றுமைச் சொல்லாம்; எனவே, தாமாக நின்று பொருளுணர்த்துஞ் சொல்லாகா, எ-று. என்றது, இடைச்சொற்கள் எல்லாம் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் போலப் பொருளையும் தொழிலையும் தாமாக நேரே யுணர்த்தாது ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை யுருபுபோலச் சொற்பொருளை வேறுபடுத்துவன என்பதாம். வேற்றுமை-வேறுபாடு; வேற்றுமைச்சொல்-வேற்றுமையைச் செய்யுஞ்சொல். மன் என்னும் இடைச்சொல் கழிவினும் ஆக்கத்தினும் ஒழியிசையினும் வந்தவழித்தான் இடை நின்று நிலை மொழியின் |