பக்கம் எண் :

374தொல்காப்பியம்-உரைவளம்

உம்மை இறந்தது தழீஇயிற்று. ‘உரிச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்’ என்றது மேற்கூறிய இடைச்சொல்லே போல உரிச்சொல்லும் தாமாக நில்லா; பெயரும் வினையும் அடைந்து பொருள் வேறுபடுதலுடைய; அது நோக்கியென்பது. இருதலையாக அவற்றை வேற்றுமைச்சொல் என்றவாறு.

சேனா

இ-ள் : உரிச்சொல்லிடத்தும் வேறுபடுக்குஞ் சொல்லாதற்கும் உரியன உரியவாம்; எல்லாம் உரியவாகா, எ-று. எனவே, உரிச்சொல்லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப்பட்டும் இருநிலைமையும் உடையவாய் வருவனவே பெரும்பான்மை யென்பதாம்.

வேறுபடுக்குஞ் சொல்லாவன உறு, தவ, நனி என்னுந் தொடக்கத்தன. இருநிலைமையும் உடையன; குரு, கெழு, செல்லல், இன்னல் என்னுந் தொடக்கத்தன. உறுபொருள், தவப்பல, நனிசேய்த்து, ஏகல்லடுக்கம் என இவை ஒன்றை விசேடித் தல்லது வாராமையும், குருமணி விளங்கு குரு, கேழ் கிளரகலம் செங்கேழ், செல்லல் நோய் அருஞ்செல்லல், இன்னற்குறிப்பு பெரியரின்னல் என இவை ஒன்றனை விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் இருநிலைமையு முடையவாய் வருமாறும், வழக்குஞ் செய்யுளு நோக்கிக் கண்டு கொள்க. குரு விளங்கிற்று, செல்லல்தீர எனத் தாமே நின்று வினை கொள்வன விசேடிக்கப்பட்டுந் தன்மையுடைய வாதலின் விசேடிக்கப்படும் சொல்லாம். பிறவும் விசேடித்தல்லது வாராதனவும் விசேடித்தும் விசேடியாதும் வருவனவும் வழக்கும் செய்யுளும் நோக்கி யுணர்க.

வேறு படுக்குஞ் சொல்லேயாவன இவையெனத் தொகுத்துணர்த்தற்கும் ‘உரிச்சொல் மருங்கினும் உரியவை யுரிய’ எனச் சூத்திரம் சுருங்குதற்கும் இடையியலுள்ளும் உரியியலுள்ளும் வையாது இரண்டு சூத்திரத்தையும் ஈண்டு வைத்தார்.

தெய்

உரிச்சொல் மருங்கினும் இடைநின்று பொருளுணர்த்தும் சொல் உள என்பது உணர்த்துதல் நுதலிற்று.