பக்கம் எண் :

38தொல்காப்பியம்-உரைவளம்

சேனா.

இ-ள் : பொதுவெழுத்தா னியன்றனவே யன்றி, வடவெழுத்தானியன்ற வடசொற் சிதைந்து வரினும் பொருத்தமுடையன செய்யுளிடத்து வரையார், எ-று.

உ-ம் : ‘அரமிய வியலகத் தியம்பும்’ (அகம் 124) எனவும், தசநான் கெய்திய பணைமருள் நோன்தாள்’ (நெடுநல் 115) எனவும் வரும்.

‘சிதைந்தன வரினும்’ எனப் பொதுப்படக்கூறிய வதனான் ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் 2பாகதமாய்ச் சிதந்து வருவனவும் கொள்க.

3இச்சூத்திரத்தானும் அவை தமிழ்ச் சொல் அன்மையறிக.

தெய்.

மேலதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : எழுத்தொரு பொருந்திய சொல்லேயன்றிச் சிதைந்த சொற்கள் வரினும் தமிழ்வழக்கிற்குப் பொருந்தினவை நீக்கப் படா, எ-று.

அவையாவன : கந்தம், தசநான்கு, சாகரம், சத்திரம், 1முத்து, பவளம் எனவரும் பாகதச் சிதைவாகி வருவனவும் கொள்க.


2. பாகதம் - பிராகிருதம் - இழிசனர் வழக்கு. ‘ஆக்ஞா’ உயர்ந்தோர் வழக்கு ஆணை - இழிந்தோர் வழக்கு. நஷ்டம் - நட்டம். கிருஷ்ணன் - கண்ணன். வட்டம் என்பது தமிழ்ச்சொல்லே.

3. இது முன்சூத்திரத்தில் உரையாசிரியர்க்குக் கூறிய கருத்தையுட் கொண்டது.

1. முத்து பவளம் எனும் தமிழ்ச்சொற்கள் முத்தா, பிரவாளம் என ஆரியத்தில் சிதைந்தன என்பதே சாலும்-சிவ.