வினைக்கட் கிடந்த தொழிலானும் பண்பானும் குறிப்பானும் தெரிநிலை வினையும் குறிப்பு வினையுமாய் முடிக்கும் சொல்லை விசேடித்தலும் பிறவுமாம். செய்தென் எச்சத்து ஈறுதிரிதல் வினையியலுட் (சொல் 228) காட்டிப் போந்தாம். 7‘பெருங்கை யற்றவென் புலம்பு முந்துறுத்து’ என்புழிப் ‘பெரும்’ என்பதனை ஒருசாரார் வினையெச்சவாய்பா டென்ப. ஒருசாரார் வினைச் சொற்பற்றி நின்றதோர் உரிச்சொல் என்ப. 8இடைச்சொல்லும் உரிச்சொல்லும் மேற்கூறப்பட்ட இலக்கணமேயன்றிப் பிறவிலக்கணமும் உடைய என்பதுணர்த்தினார்; இனி அவையேயன்றி வினையெஞ்சு கிளவியும் வேறு பலவிலக்கணத்தன என்பதுபட நின்றமையான் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. 9அவ்விலக்கணம் ஓரியலவன்றித் திரிதலும் வேறு பொருள் உணர்த்துதலும் விசேடித்தலு மாகிய வேற்றுமையுடைய வாகலின் ‘வேறுபல் குறிய’ என்றார். வினையெச்சத்துள் 10விசேடித்தே நிற்பனவும் உள என்பதூஉம் உணர்த்துகின்றாராகலின் இதனை வினையியலுள்வையாது ஈண்டு விசேடிக்குஞ்சொல் உணர்த்துவனவற்றோடு வைத்தார்.
7. பெரும் என்பது கையற்ற என்ற வினையுடன் முடிவதால் வினையெச்சவாய்பாடு என்பர். உரிச்சொல் என்பார் கூற்றே நன்று. 8. இடைச்சொல் எல்லாம் (59) உரிச்சொல் மருங்கினும் (60) 4ன்னும் சூத்திரங்களில் கூறப்பட்டன. 9. திரிதல்-மோயினள்; வெய்ய சிறிய மிழற்றும் என்பதில் வெய்ய என்பது விரும்பத்தகாத என்று வேறு பொருளையும் சிறிய என்பது சுருக்கமாக என்று வேறு பொருளையும் தந்தன; விசேடித்தல் ஓடி விரைந்து முதலியவற்றிற் காண்க. 10. உண்டுவந்தான் என்றால் உண்ணல் வருதல் என இருதொழில் காணலாம். ஓடி வந்தான் என்பதில் ஓடுதலும் வருதலும் என இருதொழில் இல்லாமல் ஓடி என்பது வந்தது எப்படி என விசேடிக்க ஒரு தொழிலே இருத்தல் காண்க. |