லால் திரியாமல் பொருளால் எச்சமாகத் திரிந்து வருவது முற்றெச்சம் எனக் கொண்டார் அவர் என்னலாம். வினைமுற்றென்பது உயர்திணை அஃறிணை, விரவுத்திணை ஆகிய மூன்று பொருள்கள் தோறும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களில், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலமும் பற்றித் தெரிநிலை குறிப்பு என்னும் இரண்டு வகையில் வரும் (எச்ச.) எனக்கூறி, “எவ்வயின் வினையும் அவ்வியல் நிலையும்” ( ) என்றும் கூறினார். இச்சூத்திரத்தின் பொருள் “எவ்விடத்து வினையாயினும்-எல்லாவினையும் முற்றுச் சொல்லாகவே நிற்கும்” என்பதாம். இவ்விடத்துச் சேனாவரையர் “எல்லாவினையும் முற்றுச் சொல்லாம் எனவே, எச்சமாதல் ஒருதலை யன்று என்பதாம். ஆகவே, வினைச் சொல்லாதற்குச் சிறந்தன முற்றுச் சொல்லே என்பதாம். எல்லாவினையும் முற்றுச்சொல்லாகவும், கச்சினன், கழலினன், நிலத்தன், புறத்தன் என்னும் தொடக்கத்து வினைக்குறிப்பின் முதனிலை எச்சாமாய் நில்லாமையும் வழக்கு நோக்கிக்கண்டு கொள்க” என்று எழுதினார். எனவே, இயல்பான முற்றுச் சொல்லே காலப்போக்கில் எச்சமாக மாறும் என இது கொண்டுநாம் உணரலாம். உண்டான்’ என்னும் சொல்லே சிதைந்து ‘உண்டு’ என எச்சமாக வந்ததாக அறியலாம். அதனான், ‘உண்டான் வந்தான்’ என்ற தொடரே ‘உண்டுவந்தான்’ ஆகியிருக்கலாம். ஓருகாலத்தில் முற்றாக இருந்த சொல்லே காலப்போக்கில் சிதைந்து எச்சமாகத் திரிந்தது என்பதைக் கொண்டு பார்த்தால் முற்றெச்சம் என்பது ‘முற்றே எச்சமாகத் திரிவது’ என்னும் பொருள்படுதலை யறியலாம். இதற்குத் தொல்காப்பியர் தரும் பிறிதொரு சான்றும் உண்டு. “செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்வியல் திரியா தென்மார் புலவர்” (வினையியல்) என்னும் சூத்திரம் சான்று தரும். ‘செய்கு’ என்பது, தன்மை யொருமை எதிர்கால வினைமுற்று பெயரொடு முடிய வேண்டும் என்றாராகலின், ‘செய்குயான்’ எனவரும். அவ்வாறன்றி ‘செய்கு வந்தேன்’ என வினையொடு முடிந்தாலும் அச் ‘செய்கு’ என்பது வினை முற்று நிலையில் திரிதல் இல்லை. எனவே, |