ஒன்று உரைக்குமிடத்து இயைபில்லாத இரண்டு சொல் ஒரு பொருட்கண் நிற்பச் சொல்லுதல் உண்டு; உண்டேனும் அஃது அமைக என்றவாறு. வ-று : இந்நாழிக்கு இந்நாழி சிறிதுபெரிது என்பது; சிறிது என்ற சொல்லும் பெரிது என்ற சொல்லும் தம்முள் மாறுகோளுடைய அந்நாழிமேலே நின்றனவேனும் அமையும் என்பது. என்னை யமையுமாறு எனின், சிறிது என்று நின்ற தன் சிறுமையே பெரிது என்பான் சொல்லினான் அல்லன். அந்நாழிக்கு இந்நாழி பெரிய துணை மிகுதியில்லை, பெருமை சிறிது எண்ணிய சொல்லினான்; அமையும் என்பது. சேனா இ-ள் : வழக்கிடத்து உடன்நிற்கப் பாலன வல்லன வற்றது உடனிலை போற்றுக, எ-று. உடன் நிற்கப்பாலன வல்லவாவன; தம்முள் மாறுபாடுடையன. மாறுபாடில்லனவற்றது உடனிலைக்கண் ஆராய்ச்சியின்மையின், ‘உடனிலை’ என்றது மாறுபாடுடையனவற்றதுடனிலையே யாம். உ-ம் : ‘இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது’ என உடன் நிற்கப் பாலன வல்லாச் சிறுமையும் பெருமையும் உடன் நின்றவாறு கண்டு கொள்க. சிறிது என்பது பெரிது எனப்பட்ட பொருளை நோக்காது பெரிது என்பதற்கு அடையாய் மிகப்பெரிதன்று என்பதுபட நிற்றலான் அமைவுடைத்தாயிற்று. அறிதல் என்பது இவ்வாறு அமைவுடையன கொள்க என்றவாறு. மாறுபாடுடையன உடன்நிற்றல் *எழுவகை வழுவினுள் ஒன்றன்மையான், இதனைக் கிளவியாக்கத்துட் கூறாது ஈண்டுக் கூறினார். தெய் மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.
* எழுவகைவழு-திணை, பால், இடம், எண், வினா, செப்பு, மரபு வழு என்பன. |