பக்கம் எண் :

40தொல்காப்பியம்-உரைவளம்

பருப்பதம் என்றாற் போல்வன பின்னுள்ளோர் செய்யுட்கண் திரிந்து ஏற்கும் எழுத்துகளால் மருவி வந்தன.

இனி, சிதைந்தன வரினும் எனப் பொதுப்படக் கூறியவதனால், ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாகதமாகச் சிதைந்தனவும் கொள்க.

வெள்

இதுவும் அது.

இ-ள் : பொது வெழுத்தான் இயன்றனவேயன்றி வடமொழிச் சிறப்பெழுத்தாலாகிய சொற்களும் தமிழ் ஒலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின் அவற்றையும் நீக்காது ஏற்றுக் கொள்வர் ஆசிரியர், எ-று.

‘இயைந்தன வரையார்’ எனவே, தமிழ் ஒலிக்கு இயையாதன நீக்கப்படும் என்பதாம்.

உ-ம் :‘அரமிய வியலகத் தியம்பும்’
 ‘தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்’
‘வாதிகை யன்ன கவைக்கதிர்’
‘கடுத்தோ ரிராமன் உடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன்’

என்றாற் போல்வன சான்றோர் செய்யுட்கண் சிதைந்து வந்தன.

‘சிதைந்தன வரினும்’ எனப் பொதுப்படக் கூறியவதனால் ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாகதமாகச் சிதைந்தனவும் கொள்ளப்படும்.

ஆதி

வடசொற்கள் தம்முறையிற் சிதைந்துவரினும் தமிழ் முறைக்கு இயைந்தவற்றை நீக்கமாட்டார் ஏற்று நிற்பர்.

இராவணா - இராவணன் என உருச் சிதைந்து வருகிறது. விபீஷணா - வீடணன் எனச்சிதைந்து வருகிறது. ஆயினும் தமி்ழ் நடைக்கு இயைந்து வருவதால் அவை தமிழாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.