க. வா. சச்சிதானந்தம் பொருள் : செய்யுள் ஈட்டச் சொற்களாக இயற்சொல் முதலிய நான்குமேயன்றி அவற்றின் சிதைவுச் சொற்களும் பொருத்தமுடையன வரையப்படா என்றவாறு. உலகவழக்கில் எளிதிற் பொருள் விளங்கும் நிலம், நீர், காற்று முதலிய இயற் சொற்கள் போலவே இயற் சொற்களின் சிதைவுச் சொற்களும் உலக வழக்கில் எளிதிற் பொருள் உணர்த்துவனவும் உண்டு. அவை இலக்கணப் போலி மரூஉ வகையில் வரும் சொற்களாம். கோயில், பொதியில் முன்றில் என்பன இலக்கணப் போலிகள். ‘அருமருந்தன்ன’ எனும் சொற்றொடர் ‘அருமந்த’ என வருவது மரூஉ *“அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளிதோ” எனச் செய்யுளில் ஆளப்பட்டமை காணலாம். இனித் திரிசொல் என்பது திரித்துக் கொள்ளப்பட்ட சொல் என்பர் சேனா வரையர். அப்படியாயின் அது சிதைவுச் சொல் என்பதில் ஐயமில்லை. கிளியை யுணர்த்தும் ‘கிள்ளை’ என்பது உறுப்புச் சிதைந்தது. மலையையுணர்த்தும் ‘விலங்கல்’ என்பது முழுவதும் சிதைந்தது என்பர் அவர். நாம் எழுத்துச் சிதைவில்லாத விலங்கல், வெற்பு என்பன போன்ற சொற்களைத் திரிசொற்கள் என்றும், கிள்ளை, மஞ்ஞை போன்ற சொற்களைத் திரிசொற் சிதைவுகள் என்றும் கொள்ளலாம். எனவே, இவ்விருவகைச் சொற்களும் செய்யுளீட்டச் சொற்களாம். திசைச் சொல்லிலும் சிதைவுச் சொற்கள் உண்டு. ஆவினைப் பெற்றம் என்பது தென்பாண்டி நாட்டார் கூறுவது. அந்நாட்டாரே தாயைத் ‘தள்ளை’ என்றும் கூறுவர். ‘தள்ளை என்னும் சொல், தெலுங்கில் ‘தல்லி’ என்று வழங்கும். எனவே, ‘தல்லி’ என்ற தெலுங்கு சொல் தென்பாண்டி நாட்டில் ‘தள்ளை’ எனச் சிதைந்து வழங்கியது என்னலாம். (தமிழில் தாய்க்குத் தள்ளை என்பது பெருவழக்கன்று). எனவே, சிதைவின்றியும் சிதைந்தும் வழங்கும் திசைச் சொற்களும் செய்யுளீட்டச்சொற்களாகும். வாரி, குங்குமம், மணி முதலியன போன்ற சொற்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துகளால் ஆன வடசொற்களாம். சுகி, போகி போன்ற சொற்கள் வடமொழிச்
* பெரிய புராணம் 4: 14 |