ஆகுமிடம் என்பதனால் பன்மையுணர்த்துதற்கும் பன்மைச் சொல்லோடு தொடர்தற்கும் பொருந்தும் வழிக்கொள்கவென்பதாம். தெய் ஒருமைப் பெயர் பன்மைப் பொருள் உணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : ஒருமை குறித்த பெயர்ச்சொல் பன்மைக்கு ஆகும் இடனும் உண்டு, எ-று. புலையன் எறிந்த பூசற் றண்ணுமை ஏவல் இளையர் தாய் வயிறு கரிப்ப (அகம். 96) என்றவழித் ‘தாயர்’ எனல் வேண்டுமாயினும் ‘தாய்’ என்பது பன்மை குறித்து நின்றது. நச் இது பால் வழு அமைக்கின்றது. இ-ள் : ஒருமை கட்டிய பெயர் நிலைக்கிளவி-ஒருமையைக் கருதிய பெயராகிய நிலைமையை யுடைய சொல், பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே-பன்மைக்குப் பொருந்தி நிற்கும் இடமும் உண்டு, எ-று. எனவே, பன்மை சுட்டிய பெயர்ச்சொல் ஒருமைக்குப் பொருந்தி நிற்கும் இடமும் உண்டு என்னும் பொருள் அருத்தாபத்தியால் தந்தது. உ-ம் : ‘அஃதை தந்தை, அண்ணல் யானை அடுபோர்ச்சோழர்’ என்புழி சோழர் எல்லாரும் அஃதைக்குத் தந்தையாம் முறையராய் நிற்றலின், ‘தந்தை’ என்னும் ஒருமை சோழர் என்னும் பன்மையோடு தனித்தனி சென்று கூடுதலின் வழுவின்றேனும் ஈற்றுப் பன்மைபற்றி வழுவமைத்தார். |