பக்கம் எண் :

பால் வழு வமைதி சூ. 64415

என்று கூறுகின்றாள், ‘இரைதேரும் மனக்குறிப்பு உடைமையின் கேளாது; சிறிது கேட்டதாயினும் கொலைசூழ் குருகு ஆதலின் கூறுவதும் செய்யாது; இத்தன்மைத்து ஆயதோர் குருகும் உண்டு’ என்று கூறுதலின் ‘உண்டு’ என்று ஒருமை வாசகத்தால் கூறினார்.

இனி, ‘அவ்விரண்டனுள் கூர்ங்கோட்ட காட்டுவல்’ என்புழி ‘இரண்டனுள் என ஒன்றை வகுத்தமையால் கூர்ங்கோட்டது என ஒருமையாகற்பாலது ‘கோட்ட’ எனப்பன்மையாய் நிற்றலும் இதனால் கொள்க.

என்நீர் அறியா தீர்போல இவைகூறின் (கலி. 6) என ஒருவனைப் பன்மையாற்கூறிப் பின்னர் ‘நின்னீர வல்ல நெடுந்தகாய்’ என அவனை ஒருமையால் கூறுவன போல் வனவும், ‘இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்று ஐய’ (கலி. 2) என்றாற் போல்வனவும் இதனால் கொள்க.

இன்னும் இதனானே ‘நம்பிமார், நங்கைமார், அன்னைமார்’ என்றாற்போல்வன ஒருமைப்பெயர் அடுத்து நின்று ‘மார்’ ஈறுபன்மையுணர்த்துதலும் கொள்க.

‘யான் எம்மூர் புகுவன், நீ நும்மூர் புகுவை’ என்றாற் போல்வனவோ எனின், அவை ‘யான்புகுவன், நீபுகுவை’ என ஒருமை முடிபோடு முடிந்து நிற்ப, எம்மூர் நும்மூர் என்பன வேறோர் முடிபாய் நின்றன என்று கொள்க.

இனி, மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள்’ (குறுந் 87) என்பது ‘மராத்துக் கடவுள்’ என நிற்கும். இவை போல்வன அன்றி, முன்னர் காட்டிய உதாரணங்கள் போல மயங்கி வருவன உளவேல், அவற்றையும் இச்சூத்திரத்தான் அமைத்துக்கொள்க.

வெள்

இது பால் வழு அமைக்கின்றது.

இ-ள் : ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மைக்கு ஆகும் இடமும் உண்டு, எ-று.