பக்கம் எண் :

158தொல்காப்பியம்-உரைவளம்

கருமை + குதிரை = கருங்குதிரை எனவரும் போது மை எனும் மகர ஐகாரம் தொக்கமையின் பண்புத் தொகையாயிற்று என்பதால் ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. குதிரை கரியது என்னும்போது, கரியது என்பது, கருமை + அ + து எனப் பிரிக்கப்படுதலின் அதில் ‘மை’ என்பது தொக்கிநிற்றலின் அக்கரியது என்னும் ஒரு சொல்லையும் பண்புத் தொகை என்னல் வேண்டும். என்னாமையின் மகர ஐகாரம் தொகுவது பண்புத் தொகை என்பது பொருந்தாது. அன்றியும் வட்டப் பலகை என்பதில் வட்டமை என மகர ஐகாரம் விரிக்கப்படவில்லை. அவ்வாறே சாரைப்பாம்பு போல் வனவற்றிலும் மகர ஐகாரம் விரிக்கப்படவில்லை.

இனிச் சேனாவரையர் தொகை என்பது பிரிக்கப்படாமல் ஒட்டி ஒரு சொல் போல்வது என்னும் கொள்கையினராதலின் கருங்குதிரை என்பதைப் பிரித்தல் கூடாது என்பர். அதற்கு அவர் கொண்டசான்று தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் ‘பண்புதொகு மொழி புணரியல் நிலையிடையுணரத் தோன்றா’ (எழு. குற். 77) எனக்கூறியதேயாம்.

உரையாளர் யாவரும் சாரைப்பாம்பு போலும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகைப் பற்றிக் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை.

நச்சினார்க்கினியர் பண்புத் தொகையை மூவகையில் கொண்டார் (1) ஐம்பாலறியும் பண்பு தொகுமொழி. அது கரும்பார்ப்பான். கருங்குதிரை போல்வன (2) ஐம்பாலறியும் பண்பு தொகுமொழியல்லாத பிறமொழி தொகுவது. அது வட்டப் பலகை போல்வன. (வட்டம் ஆகிய பலகை).

(3) இரு பெயரொட்டுப் பண்புத்தொகை - அது சாரைப்பாம்பு போல்வன.