என்புழிச் ‘சிறுபசுங்கால’ என்று பன்மையாற் கூறிப் பின்னைக் ‘குருகும் உண்டு’ என்று ஒருமையாற் கூறுதல் வழுவாயிற்று; ஆயினும் அமைக என்பது. ‘இரண்டனுட் கூர்ங்கோட்ட காட்டுவல்’ என்புழிக் கூர்ங்கோட்டது எனற்பாற்று; என்னை? இரண்டனுள் என்றாற் பின்னை ஒன்றே யாகலின் என்பது. ஆயினும் அமைக என்பது. இனி, வழக்கினுள் எம்முளவனல்லன், நும்முளவனல்லன் என்னும். பிறவும் இவ்வாறு இடவழுப்பட வருவன அமைத்துக் கொள்க. இனி, ஒருசாரார் சம்பு சள்ளை சத்தி என்பன ஈண்டுக் காட்டுவாரும் உளர் பிறவும் முடியாது நின்றனவெல்லாம் இதுவே விதியோத்தாக முடித்துக் கொள்க என்பது. ஒன்பதாவது எச்சவியல் முற்றிற்று. சொல்லதிகாரமும் உண்மைப் பொருளும் வரலாறும் முடிந்தன. சேனா இ-ள் : செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின் கட் பொருள்பெறச் சொல்லப்பட்ட சொல் எல்லாவற்றையும் பல்வேறு செய்கையுடைய தொன்னூல் நெறியிற் பிழையாது சொல்லை வேறுபடுத் துணருமாற்றாற் பிரித்துக் காட்டுக எ-று. என்றது ‘நிலப்பெயர் குடிப்பெயர்’ எனவும் (பெய. 11) ‘அம்மாம் எம்ஏம்’ எனவும் (வினை. 5) பொதுவகையாற் கூறப்பட்டன அருவாள நிலத்தான் என்னும் பொருட்கண் ‘அருவாளன்’ எனவும், சோழ நிலத்தான் என்னும் பொருட்கண் ‘சோழியன்’ எனவும் ; இறந்த காலத்தின்கண் உண்டனம், உண்டாம் எனவும்; நிகழ்காலத்தின் கண் உண்ணா நின்றனம், உண்ணா நின்றாம், உண்கின்றாம் எனவும் ; எதிர் காலத்தின் கண் உண்குவம், உண்பாம் எனவும் வேறுபட்டு வருமன்றே ? அவ்வேறு பாடெல்லாம் கூறிற் பல்கும் என்றஞ்சிக் கூறிற்றிலனாயினும், தொன்னூல் நெறியிற் பிழையாமல் அவ்வேறு பாடுணரப் பிரித்துக் காட்டுக நூல்வல்லார் என்றவாறாயிற்று. |