இவ்விரண்டுரையும் இச்சூத்திரத்திற்கு உரையாகக் கொள்க. எச்சவியல் முற்றிற்று சொல்லதிகாரச் சேனா வரையருரை முற்றுப் பெற்றது. தெய் இவ்வதிகாரத்துள் ஓதப்பட்ட எல்லாச் சொற்கும் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : செய்யுளிடத்தும் பொருளுணரச் சொல்லப்பட்ட சொற்களெல்லாம் ஈண்டு ஓதிய இலக்கணத்தான் முற்றுப் பெற்றில வாயினும், பலவகைப்பட்ட ஆசிரியமத விகற்பத்தான் வரும் இலக்கணத்திற் பிழையாமல் யாதானுமொரு சொல்லாயினும் பாகுபடுத்துணருமாறு வகுத்துக் காட்டி யுணர்த்தும் நூலுணர்ந்தார், எ-று. பிறநூல் முடிபினான் முடியினும் இலக்கணப் பிழைப்பின்றாம் என்றவாறு. 1கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர இன்னே வருகுவர் தாயர் (முல்லைப் 15, 16) என்றவழி ஒன்றனைக் கூறும் தன்மைக் கிளவியின் அடங்காமையின் இதன் இலக்கணம் வேறுவேண்டியது. 2வளியிடை வழங்கா வனஞ்சூடிய மண்டிணி கிடக்கை (புறம். 25) என்றவழியும், ‘நெடிய வலிய ஆள்’ எனவும் பெயரெச்சம் அடுக்கி வந்தது.
1. பொருள் : வளைந்த கோலையுடைய கோவலர் பின்னிருந்து ஓட்டிவர இப்பொழுதே பசுக்கள் வரும். இதில் பசுக்களைத் தாயர் என்றதும் வருகுவர் என்றதும் வழு. இது பலவற்றை உயர்த்திக் கூறிது ஒன்றனைப் பன்மையாற் கூறியதன்று. அதனான் ‘ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்’ (கிளவி. 27) என்னும் சூத்திரத்தில் ‘ஒன்றனைக் கூறும் பன்மைக்கிளவி என்பதில் அடங்காது. 2. வழங்கா, சூடிய என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி மண்டினி கிடக்கை என்னும் பெயர் கொண்டன. |