அதிகாரப் புறனடை சூ. 66 | 435 |
வியும் போயவாறும் அதற்குத்தான் அழிவு தக்கு நிற்றலின் அவரோடு போதல் ஆற்றாது பின்னர்ப் போயவாறும் தோன்றக் கூறுகின்றானாதலின் ‘பல்லோருள்ளும்’ எனக் கூறினாள் என்று பொருள் கூறுக. “முரசு முழங்குதானை மூவருள்ளும் அரசெனப் படுவது நினதே பெரும” (புறம். 35) என்புழி மூவிர்’ என்னாதது என்னை யெனின், புலவன் கூறுகின்ற இவனை ஒழிந்த இருவகைக் குலத்தோரும் இவன் முன்னுள்ளோரும் படர்க்கையர் ஆதலின், அம் மூவகைக் குலத்து உள்ளோரையும் கூட்டி ‘முரசு முழங்கு தானை மூவர் அரசுள்ளும்’ ‘அரசு’ என்று ஈண்டுச் சிறப்பித்துச் சொல்லப்படுவது அச்சோழன் வழித் தோன்றிய நின் அரசே என்றான் எனப் பொருள் கூறுக. இங்ஙனம் சான்றோர் செய்யுட்கள் இவ்வாசிரியர் கூறிய இலக்கணங்களுள் அடங்காதது போன்று கிடப்பன பிறவும் உளவேனும், நுண்ணுணர்வுடையோர் அவற்றின் பொருட்பயனை நோக்கி, ஒருவாற்றான் இக்கூறிய இலக்கணங்களுள் அடக்கிக் கொள்க. இச்சூத்திரத்தின் கருத்து, ‘இவ்வதிகாரத்துள் சிலவற்றிற்கு விரித்துக் கூறாது நுண்ணுணர் வுடையார் உணருமாறு கூறிய இலக்கணங்களும் உள; அவற்றிற்கு முதல் நூலானும் விரித்துரையானும் காண்டிகையானும் உணர்த்துக’ என்று கூறுதலாம். இங்ஙனம் கூறினார், ‘முடிந்தது காட்டல்’ என்னும் தந்திரவுத்திக்கு இனமாக என்று உணர்க. இங்ஙனம் கூறாது ‘யான் கூறப்படும் இலக்கணங்களை முதல் நூல்களால் கூறிக் கொள்க’ எனின், அது குன்றக் கூறல் என்னும் குற்றமாம் என்று உணர்க. எச்சவியல் முற்றும் சொல்லதிகாரம் முற்றும் சொல்லதிகாரத்திற்கு மதுரையாசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன் செய்த காண்டிகை முற்றும். ----- |