வெள் இஃது இவ்வதிகாரத்துள் ஓதப்பட்ட சொற்கெல்லாம் ஓர் புறனடை கூறுகின்றது. இ-ள் : செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின் கண் பொருள் விளங்கச் சொல்லப்பட்ட சொற்கள் எல்லாவற்றையும் பல்வேறு செய்கையை யுடைய தொன்னூலின் நெறிமுறையில் தவறாது சொல்லை வேறுபடுத்து உணருமாறு பிரித்துக் காட்டுக, எ-று. ‘நிலப் பெயர் குடிப்பெயர்’ எனவும், அம்மாம் எம்மேம்’ எனவும் மேற் பொது வகையாற் கூறப்பட்டன. அருவாளனிலத்தான் என்னும் பொருட்கண் அருவாளன் எனவும், சோழன் நிலத்தான் என்னும் பொருட்கண் சோழன் எனவும் நிலம் பற்றி வரும் பெயர்கள் எல்லாம் நிலப் பெயர் எனப் பிரித்துப் பொருள் உணர்த்தப்படும். இவ்வாறே இறந்த காலத்தின் கண் உண்டனம், உண்டாம் எனவும்; நிகழ் காலத்தின் கண் உண்கின்றாம் எனவும்; எதிர் காலத்தின் கண் உண்குவம், உண்பாம் எனவும் வரும்வேறுபா டெல்லாம் கூறிற் பெருகும் என்றஞ்சிக் கூறிற்றில னாயினும் அவ்வேறுபா டெல்லாம் உணர நூல் நெறிபிழையாது பிரித்துக் காட்டுதல் இந்நூலைக் கற்றுணர்வோர் கடமையாம் என அறிவுறுத்தியவாறாம். இதன்கண் ‘பல்வேறு செய்தியின் நூல்’ என்றது அகத்திய முதலாய தொன்னூல்களை செய்தி-செய்கை+விதி. இனி இச்சூத்திரத்திற்கு ‘செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் என்னாற் கிளக்கப்படாது தொன்னூலாசிரியராற் கிளக்கப்பட்டு எஞ்சி நின்ற சொற்கள் எல்லாவற்றையும் அவ்வத் தொன்னூல் நெறியிற் பிழையாமல் வரைந்துணரக் கொணர்ந்து பிரித்துக் காட்டுக’ என மற்றும் ஓர் உரை வரைந்து இடைவழு வமைதி பலவற்றுக்கு எடுத்துக் காட்டு தந்து விளங்குவர் சேனாவரையர். |