அதிகாரப் புறனடை சூ. 66 | 437 |
ஆதி இலக்கிய நெறியிலும் உலக வழக்கியலுமாகப் பொருள் தெளிவாகச் சொல்லப்பட்ட யாவற்றையும் முந்து நூல்நெறிக்கு விலகாமல் பல்வகைச் செய்திகளையும் சொல்வரம்போடு அறிந்துணரப் பிரித்துக்காட்டுக. இங்குக் கூறப்பட்ட வற்றை முறையோடு பிரித்து உணர்க. பிரிப்பது முந்து நூல்முறை தழுவியதாக இருத்தல் வேண்டும். முறைகெடப் பிரித்துப் பொருளைப் பிழைபட உணரலாகாது என அறிவிக்கின்றார். ‘அவ்வாறென்ப (எச்ச.31) - அ ஆறு என்ப என உரையாசிரியர்கள் தவறாகப் பிரித்தார்கள். அதற்கேற்ப உரையெழுதப் பலவாறு கதை கட்டுகிறார்கள், ஆறு ஆறு அவ்வாறு என்பது மெய்ப்பொருள். இறந்த கால இடைநிலை த்-ற், ட் ஆக மாறுகின்றமையின் ற், ட் இடைநிலை எனக் கூறுவது தவறு. ஒன்றன்பால் விகுதி து-று. டுவாக மாறுகின்றமையின் று, டு விகுதி எனக் கூறுவது தவறு. நடவாய்-முன்னிலை உடன்பாட்டு வினையாயின் நட+வ்+ஆய்-வ் எதிர்கால விகுதி எதிர்மறை வினையாயின் நட+ஆய்+ஆ-வா ஆனது உடம்படு மெய் பெற்று. இடம்பொருள் அறிந்து முறையோடு பகுத்து உணர்தல் வேண்டும் என ஆசிரியர் அறிவுரை கூறுகின்றார். எச்சவியல் உரைவளம் முற்றும். |