விரிக்கும்வழி விரித்தல், ‘தண்டுறைவன்’ எனற் பாலதனைத் ‘தண்ணந்துறைவன்’ (குறுந். 296) எனவிரித்தல். தொகுக்கும் வழித் தொகுத்தல் மழவரையோட்டிய எனற் பாலதனை ‘மழவரோட்டிய (அகம் 1) எனத் தொகுத்தல்.’ நீட்டும்வழி நீட்டல், ‘பச்சிலை’ எனற்பாலதனைப் ‘பாசிலை’ என நீட்டல். குறுக்கும் வழிக்குறுக்கல், ‘உண்டார்ந்து’ என்பதனை உண்டருந்து’ எனக் குறுக்கல். பத்துவகை விகாரத்துள் அறுவகை விகாரம் ஈண்டுக் கூறினார். 1இனமில்லாதன இனமுள்ளது போலச் சொல்லுதலும், இனமுள்ளதனை இனமல்லது போலச் சொல்லுதலும் ‘இனச்சுட்டில்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை’ (கிளவி 18) என்பதனுட்சொல்லிப் போந்தாம். இனி இடைச் சொற் போக்கல் புடைச்சொல் புகுத்தல் என இரண்டும் ‘நிரனிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று’ (எச்ச. 8) எனப்பட்டு அடங்கும். சேனா இ-ள் : இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நான்கு சொல்லையும் செய்யுளாகத் தொடுக்குங்கால் மெலியதனை வலிக்க வேண்டும் வழி வலித்தலும், வலியதனை மெலிக்க வேண்டும் வழி மெலித்தலும், குறைவதனை விரிக்க வேண்டும் வழி விரித்தலும், மிகுவதனைத் தொகுக்க வேண்டும் வழித் தொகுத்தலும், குறியதனை நீட்டவேண்டும் வழி நீட்டலும், நெடியதனைக் குறுக்க வேண்டும் வழிக் குறுக்கலும் ஆகிய அறுவகை விகாரமும் செய்யுளின்பம் பெறச் செய்வான் நாட்டு தலை வலியாகவுடைய, எ-று. உ-ம் : | 2‘குறுக்கை யிரும்புலி’ (ஐங், 266) | | ‘முத்தை வருடங்காலந் தோன்றின்’ (தொல்.எழு.194) |
1. இனமில்லதை இனமுள்ளது போலச் சொல்லுதல் : செஞ்ஞாயிறு இனமுள்ளதை இல்லது போலச் சொல்லுதல்; பெருஞ்சாத்தன், பெரியசாமி என இக்காலத்துப் பெயரிடுதல் காண்க. 2. குறுங்கை-குறுக்கை. முந்தை-முத்தை |