பக்கம் எண் :

எச்சவியல் சூ. 15

வடசொல் என்பது ஆரியச் சொற்போலும் சொல்; அவை 8முன்னர் விரித்துரைப்ப.

9பெயர், வினை, இடை, உரி எனப்பட்ட நான்கு சொல்லுமே இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனப்பட்டன; பிறவில்லை.

திரிசொல் செய்யுட்கே உரிய, ஒழிந்த மூன்றும் வழக்கிற்குரியவாகிச் செய்யுட்கும் புகும் என்றவாறு.

சேனா

செய்யுட்குரிய சொல்லும், அவற்றது இலக்கணமும், அவற்றாற் செய்யுள் செய்வுழிப்படும் விகாரமும், செய்யுட் பொருள்கோளும், 1எடுத்துக் கோடற்கண் உணர்த்துகின்றார்.

இதன் பொருள் : இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச்சொல்லும், வடசொல்லும் என அத்துணையே செய்யுள் ஈட்டுதற்குரிய சொற்களாவன என்றவாறு.

இயற்சொல்லானும், செய்யுட் சொல்லாகிய திரிசொல்லானுமேயன்றித் திசைச்சொல்லும் வடசொல்லும் இடைவிரர்ய்ச் சான்றோர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனைப் பாடைச் சொல்லும் செய்யுட்குரியனவோ வென்று ஐயுற்றார்க்கு இந்நான்கு சொல்லுமே செய்யுட்குரியன 2பிறபாடைச்சொல் உரிய வல்லவென்று வரையறுத்தவாறு.

செய்யுள் செய்யலாவது ஒரு பொருள்மேற் பலசொற் கொணர்ந்தீட்டலாகலான் ஈட்டம் என்றார்.


8. முன்னர்-சூ.5, 6ல்

9. சிவ. விளக்கம் பார்க்க

1. எடுத்துக் கோடற்கண்-தொடக்கத்தில்

2. பிற பாடைச்சொல் என்பதில் சிங்களம் முதலிய பாடைச் சொற்களும் அடங்கும். அவை திசைச் சொற்கள் எனப்பட்டன. எனவே எந்த பாடைச் சொல்லாயினும் திசைச்சொல்லாய் அடங்குதலின் பிறபாடைச்சொல் உரியவல்ல என்பது பொருந்தாது. நச்சினார்க்கினியர் பிறபாடைச்சொல் சிறுபான்மை வரும் என்பது காண்க-சிவ.