பக்கம் எண் :

பொருள்கோள் வகை சூ. 851

பாட்டாற் பெயர் கொடுத்து வேறிலக்கணமில்லாத மொழி மாற்றை மொழிமாற்றென்றார்.

இச்சூத்திரத்தான் மொழிபுணர் இயல் நான்கு என வரையறுத்தவாறு.

தெய்

செய்யுளகத்துப் பொருளுணரச் சொற்றொடுக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : நிரனிறையும் சுண்ணமும் அடிமறியும் மொழி மாற்றும் என நான்கென்று சொல்லுப பொருள்மேல் மொழி புணர்க்கும் இயல்பு, எ-று.

செய்யுளகத்துத் திரிந்து பொருள்படுஞ்சொல் எடுத்தோதினார், வழக்கின்கண் இயல்பாகிச் செய்யுட்கண்ணும் இயல்பாகி நடக்கும் பொருள்கள் ஓத வேண்டாமையின். அவையாமாறு தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும்.

நச்

இது செய்யுள் செய்வழி அதன் பொருட்கிடை கூறுகின்றது.

இ-ள் : இயல்பு புணர்மொழி - இயற்கையாகவே தம்முள் கூடிப்பொருள் உணர்த்தும் சொற்கள் அங்ஙனம் இயற்கையாகக் கூடிப் பொருள் உணர்த்தாது விகாரப்பட்டுப் பொருள் உணர்த்துங்கால், அவை-அவ்விகாரவகை, நிரல் நிறை சுண்ணம் அடிமறி மொழி மாற்று நான்கு என்ப-நிரல் நிறையும் சுண்ணமும் அடிமறியும் மொழி மாற்றும் என நான்கு என்று கூறுவர் ஆசிரியர், எ-று.

நிரல் நிறையும் சுண்ணமும், நிரலே நிறுத்தலும் துணித்துக் கூட்டுதலுமாகிய வேறுபாடு உடைமையின் மொழிமாற்றின் வேறு ஆயின.