நிரல் நிறைப் பொருள்கோள் சூ. 9 | 53 |
இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், நிரனிறைப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை : இச்சொல்லப்பட்டவற்றுள் நிரனிறையென்று சொல்லப்படுவது யாதோ வெனின், வினையினானும் பெயரினானும் ஆராயத் தோன்றிச் சொல் வேறு வேறு நிற்பப் பொருள் வேறு வேறு நின்று உணரப்படும், எ-று. அவற்றுள் வினையிற் றோன்றியது :- 1“உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலிருளாம் பல்பாம் பென்னக்-கெடலருஞ்சீர்த் திங்கள் திருமுகமாய்ச் 2சேர்ந்து” என்பது உடலும் உடைந்தோடும் பார்க்கும் மலரும் என்ற வினைச் சொற்கள் தம்முள் பொருளியைபு இன்றி வேறு நின்றன. இனிக் கடல் இருள், ஆம்பல் பாம்பு என நின்ற பெயர்ச் சொல்லும் அவ்வாறே நின்றமை அறிக. அவை தம்முள் பொருள் இயையுமாறு : உடலுங் கடல், உடைந்தோடும் இருள், மலரும் ஆம்பல், பார்க்கும் பாம்பு எனக் கூட்டுக. இனிப்பெயர் நிரனிறை வருமாறு : “கொடி குவளை கொட்டை நுசுப்பு உண்கண் மேனி” எனவரும். இனி அவை பொருள் கொள்ளுங்கால், கொடி நுசுப்பு, குவளை உண்கண், கொட்டைமேனி என வரும்.
1. பொருள் : அழகிய முகத்தைத் திங்களாகக்கருதி கடல் பொங்கும்; இருள் உடைந்தோடும்; ஆம்பல் முறையாக மலரும்; பாம்பு கவ்வப்பார்க்கும் இது சிந்தியல் வெண்பா. இதை நேரிசை வெண்பாவாகத் திரித்துக் காட்டினர் தெய்வச்சிலையார். 2. செத்து-பாடம். |