உண்கண், மேனி என்னும் பெயரோடு கொடி நுசுப்பு, குவளைக்கண், கொட்டைமேனி என அடைவே முடிந்தவாறு காண்க. *வினையும் வினையுமாக வருவன உளவேல், வந்த வழிக்கண்டு கொள்க. ‘நினையத் தோன்றி’ என்றதனால் பொருள் விளங்க நில்லாது நினைத்தாற் றோன்று மாறாக மயங்கி வருவனவும் கொள்க. “களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்பும் கலனுந் தோன்றும்” என்றவழிக் களிற்றிற்குக் கூம்பும் கந்திற்குக் கலனும் உவமையன்மையின் களிறு போலும் கலம், கந்து போலுங் கூம்பு எனவும் மயங்கி வந்தவாறு கண்டு கொள்க. நச் இது நிறுத்த முறையானே நிரல் நிறை கூறுகின்றது. இ-ள் : அவற்றுள் நிரல் நிறை தானே - அந்நான்கனுள் நிரல் நிறையாவது, வினையினும் பெயரினும் நினையத் தோன்றி-வினையானும் பெயரானும் ஆராயத்தோன்றி, சொல்வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையில்-முடிக்கப்படுஞ் சொல்லும் வேறே நிலை பெற்று முடிக்குஞ் சொல்லும் வேறே நிற்றலாம், எ-று. தொடர்மொழிப் பொருள் முடிக்குஞ் சொற்கண்ணது ஆகலான் முடிக்குஞ்சொல்லைப் ‘பொருள்’ என்றார். ‘வினையினும் பெயரினும்’ என்றதனான் வினைச் சொல்லான் வருவதூஉம் பெயர்ச் சொல்லான் (வருவதூஉம் அவ்விரு சொல்லான் வருவதூஉம் என நிரல் நிறை மூன்றாம்.
* ‘மாசு போகவும் காய் பசி நீங்கவும் கடிபுனல் மூழ்கி அடிசில் கைதொட்டு’ என்பது வினை நிரல் நிறைக்குச் சேனாவரையர் காட்டிய உதாரணம். அது அவரே காட்டியது போலும். சான்றோர் செய்யுளாயின் தெய்வச்சிலையார் அறிந்திருப்பர். |