பக்கம் எண் :

நிரல் நிறைப் பொருள்கோள் சூ 9.57

உ-ம் :“மாசு போகவும் காய்பசி நீங்கவும்
 கடிபுனல் மூழ்கி அடிசில்கை தொட்டு”

என்புழி, முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச் சொல் வேறு வேறு நிற்றலின் வினை நிரல்நிறை.

“கொடி குவளை கொட்டை நுசுப்பு உண்கண் மேனி” என, முடிவனவும் முடிப்பனவுமாகிய பெயர்ச்சொல் வேறு வேறு நிற்றலின் பெயர் நிரல் நிறை.

“உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும்
கடலிருள் ஆம்பல்பாம் பென்ற - கெடலருஞ்சீர்த்
திங்கள் திருமுகமாச் செத்து”

என்புழி, முடிவனவாகிய பெயரும் முடிப்பனவாகிய வினையும் வேறு வேறு நிற்றலின் பொதுநிரல் நிறை.

‘நினைய’ என்றதனால் சொல்லும் பொருளும்’ நிரல்பட நில்லாது,

“களிறும் கந்தும்போல நளிகடற்
கூம்பும் கலனும் தோன்றும்”

என மயங்கி வருதலும் கொள்க.

வெள்

இது நிரல் நிறைப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது.

இ-ள் : அந்நால்வகைப் பொருள்கோளுள் நிரல் நிறையாவது வினையாலும் பெயராலும் ஆராயத் தோன்றி முடிக்கப்படும் சொல் வேறு நிற்ப, முடிக்குஞ் சொல்லாகிய பொருள் வேறு நிற்றலாம், எ-று.

வினையினும் பெயரினும் என்றதனால் வினைச்சொல்லால் வரும் வினை நிரல் நிறையும் பெயர்ச் சொல்லால் வரும் பெயர் நிரல் நிறையும் அவ்விருசொல்லால் வரும் பொது நிரல் நிறையும் என நிரல் நிறை மூன்றாம்,

உ-ம் :“மாசு போகவும் காய்பசி நீங்கவும்
 கடிபுனல் மூழ்கி அடிசில் கைதொட்டு”

என முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறு வேறு நிரலே நிற்றலின் வினை நிரல் நிறையாயிற்று. இது மாசு போகப் புனல் மூழ்கிப் பசி நீங்க அடிசில் கைதொட்டு என இயையும்.