பக்கம் எண் :

சுண்ணப் பொருள்கோள் சூ. 1059

சுண்ணப் பொருள்கோள்

400. சுண்ணந் தானே
  பட்டாங் கமைந்த வீரடி யெண்சீ
  ரொட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல்       (10)
  
  (சுண்ணம் தானே
பட்டாங்கு அமைந்த ஈரடி எண்சீர்
ஒட்டுவழி அறிந்து துணித்தனர் இயற்றல்)

ஆ. மொ. இல.

‘Sunnam’ is the mode in which two lines of eight
‘Sir’ (measured word) grammatically formed may be
split up and joined in such way as to express the
proper meaning of the poetry.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே சுண்ணம் என்னும் பொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உரை : சுண்ணம் எனப்படுப இரண்டடியால் எட்டுச் சீராற் பொருந்துமாறு அறிந்து துணித்து இயற்ற வரும், எ-று.

வரலாறு : சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
 யானைக்கு நீத்து முயற்கு நிலை யென்ப
கானக நாடன் சுனை

என வரும். இதனை ஒட்டுமாறு : மொழிகளை, சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்து இயற்றுக.

‘பட்டாங் கமைந்த’ என்பது இயைபுடைய செய்யுள் நடைக்கொத்த அடியாகல் வேண்டும் என்றற்கு என்பது.

சேனா

இ-ள் : சுண்ணமாவது இயல்பாக அமைந்த ஈரடிக்கண் உளவாகிய எண்சீரைத் துணித்து இயையும் வழியறிந்து கூட்டி இயற்றப்படுவதாம், எ-று.