பக்கம் எண் :

74தொல்காப்பியம்-உரைவளம்

என்னும் இறுதிச்சீர் யான் என்னும் சீர்க்கு முன்னர்ச் சென்று ‘அஞ்சுவல்யானே’ என நிற்கும். இவ்வாறு நிற்பதே ஈற்றடியிற்சீர் நிலை திரிவது என்றார் அவர்.

யானஞ்சுவல் என்பது எழுவாய்த்தொடர்; ‘அஞ்சுவல்யான்’ என்பது வினைமுற்றுத் தொடர். எழுவாய்த் தொடரான ‘யானஞ்சுவலே’ என்பதும் பொருள் சிறந்து செல்லக்கூடியதே யாதலின் சீர் மாற்றம் தேவையில்லை எனச் சேனாவரையர் அவர் கருத்தை மறுத்தார். மறுப்பு நன்றே.

2. இனிச் சேனாவரையர் கூறுவது : ஈற்றடிக்கண் உள்ள இறுதிச் சீரானது ஈற்றடியின் அயலடியிற் சென்று சேர்ந்து பொருள் தருமாயினும் அதுவும் அடிமறிச் செய்யுளாம் என்பது. இதற்கு உதாரணம் அவர்க்குப் புலப்பட வில்லை.

அடிமறிச் செய்யுள் எத்தனையடியினால் அமைவதாயினும் நாற்சீர் அடியாலேயே அமைதல் வேண்டும். சேனாவரையர் கருத்துப்படி ஈற்றடியின் இறுதிச்சீர் எருத்தடியில் சென்று பொருள் தருவதாயின் அவ்வெருத்தடியை வேறிடத்தில் மாற்ற இயலாது. ஏனெனின் அது ஐஞ்சீரடியாகிவிடும். அதனால் அது அப்படியே நிற்க மற்றைய அடிகளையே மாற்றலாம். அன்றியும் இறுதியடியையும் மாற்ற முடியாது. எனவே ஈற்றடியும் ஈற்றயலடியும் அப்படியே நிற்க மற்றைய முன்னடிகளே மாற்றற்குரியனவாம். ஆனாலும் பொருள் உரைக்குமிடத்து எவ்வடியையும் எங்கும் மாற்றிய நிலையில் பொருளுரைக்கலாம். செய்யுளாகக் கூறும்போதும் எழுதும் போதும் இறுதியிரண்டடிகளை நீக்கியே மாற்றல் வேண்டும்.

3. நச்சினார்க்கினியா ‘கூறாய் தோழி யான் வாழுமாறே’ என்பதில் மாறு என்னும் இறுதிச்சீர் தனக்கெனப் பொருளின்றி வாழும்படி என்னும் முன்சீரின் பொருளே தனக்கும் பொருளாய் அமைதலின் அந்த மாறு என்னுஞ்சீர் முன்சீராகிய ‘வாழும்’ என்பதுடன் சென்றியைந்தது எனக்கூறி அடிமறிச் செய்யுளில் ஈற்றடியின் இறுதிச்சீர் அதன் முதற்சீரோடு முடியின் அதுவும் அடிமறிச் செய்யுள் வகையாம் என்றார். அவர் கருத்து இறுதிச்சீர்க்குப் பொருள் இராது என்பது.