பக்கம் எண் :

76தொல்காப்பியம்-உரைவளம்

பி. இ. நூ

நன். 413

ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை
மாற்றி ஓரடியுள் வழங்கல்மொழி மாற்றே

இ. வி. 363  ௸  ௸   ௸

இளம்

இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் ஒழிந்து நின்ற மொழி மாற்றுப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உரை : மொழிமாற்றினது தன்மையாவது, நின்ற சொல்லை மொழிமாற்றி, முன்னும் பின்னும் கொள்ளுமிடம் அறிந்துகொள்க, எ-று.

வ-று : குன்றத்து மேல குவளை குளத்துள
 செங்கோடு வேரி மலர்.

எனவரும், இதனைக் குவளை குளத்துள, செங்கோடு வேரிமலர் குன்றத்துள என மொழி மாற்றுக.

மற்றுச் சுண்ணத்தோடு இதனிடை வேற்றுமையென்னையெனின், சுண்ணம் ஈரடியெண்சீருள் அவ்வாறு செய்யப்படும்; இதற்கு 1அன்னதோர் வரையறை யில்லை யென்றவாறாம்.

சேனா

இ-ள்: மொழிமாற்றின தியல்பு, பொருளெதிர் இயையுமாறு சொன்னிலையை மாற்றி முன்னும் பின்னும் கொள்ளும் வழிக்கொளுவுதலாம், எ-று.

உ-ம் : ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும்
 பாரி பறம்பின்மேற் றண்ணுமை-காரி
விறன் முள்ளூர் வேங்கைவீ தானாணுந் தோளாள்
நிறன் உள்ளூர் உள்ள தலர்.

என, இதனுள் பாரி பறம்பின்மேற் றண்ணுமைதான் நாணுந்தோளாள் எனவும், நிறன் விறன் முள்ளூர் வேங்கைவீ எனவும்,


1. ஈரடி எண்சீர் என்ற வரையறையில்லை; ஈரடியெழு சீரிலும் வரலாம். பலவடி பல சீரிலும் வரலாம்.