அஃதேல் பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனவும் ஒரு சார் ஆசிரியர் உரைப்பவால் எனின், அவற்றுள் யாற்றொழுக்கும், அளைமறிபாப்புப் பொருள்கோளும் திரிவின்றிப் பொருள்படுதலின் இயல்பாம். கொண்டு கூட்டு சுண்ண மொழிமாற்றுள் அடங்கும். பூட்டு விற் பொருள்கோள் மொழிமாற்றுள் அடங்கும். தாப்பிசைப் பொருள்கோட்கண் முன் ஒரு சொல் வருவிக்க வேண்டுதலின், இது, ‘பிரிநிலை வினை’ (எச்ச. 20) என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும்.* நச் இது, மொழிமாற்று ஆமாறு கூறுகின்றது. இ-ள் : மொழிமாற்று இயற்கை-மொழிமாற்றினது இயல்பாவது, சொல் நிலைப் பொருள் எதிர் இயைய முன்னும் பின்னும் மாற்றி - செய்யுட்கண் ‘பா’ என்னும் உறுப்பிற்கு ஏற்பச்சொல் நின்ற நிலைப் பொருள்தராதவழிச்சொல் நின்ற நிலைக்குப் பொருள் எதிரே வந்து பொருந்தும்படி அச்சொல்லின் முன் நின்ற சொல்லைப் பின்னேயும் பின் நின்ற சொல்லை முன்னேயும் மாற்றி, கொள்வழிக் கொளாஅல்-பொருள் கொள்ளுமிடத்தே கொளுத்துதலாம், எ-று. உ-ம் : குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி 1“நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரிய” (அகம். 4) ‘புரவியினது வாங்குவள் நரம்பு ஆர்ப்பு அன்ன பரிய’ என முன் நின்ற சொல்லைப் பின்னே மாற்றியவாறு காண்க. இச்சூத்திரமும் அது. “இடை முலைக்கிடந்து” (குறுந். 178) என்பது ‘முலையிடை’ எனப் பின்னின்ற மொழியை முன்னே மாற்றியவாறு காண்க. 2‘கடற்படை குளிப்ப மண்டி’ (புறம். 6) என்பதும் அது.
* எவ்வெச்சத்துள் அடங்கும் என்பது ஆய்வுக்குரியது. 1. நரம்பார்த்தன்ன - பாடம் 2. படைக்கடல் எனமாற்றுக. |