திசைச்சொல்லும் வடசொல்லும் பெரும்பான்மை பெயர்ப்பெயராயும் சிறுபான்மை தொழிற் பெயராயும் வருதலன்றி 2ஏனையவாய்வாரா. வெள் இது செய்யுட்குரிய சொல் இவையெனக் கூறுகின்றது. இ-ள் : இயற்சொல்லும் திரிசொலும் திசைச்சொல்லும் வடசொல்லும் என அத்துணையே செய்யுள் செய்தற்குரிய சொல்லாவன, எ-று. இயற் சொல்லாலும் செய்யுட் சொல்லாகிய திரிசொல்லாலுமேயன்றித் திசைச்சொல்லும் வடசொல்லும் விரவிச் சான்றோர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனை மொழிச் சொற்களும் செய்யுள் செய்தற்குரியனவோ என்று ஐயுற்றார்க்கு, இயற்சொல்முதலிய இந்நான்குமே செய்யுட்குரியன; பிறமொழிச் சொற்கள் உரியன அல்ல என்று வரையறுத்தவாறாம். செய்யுள் செய்தலாவது ஒருபொருள்மேல் பலசொல் கொணர்ந்து ஈட்டலாதலின் ‘ஈட்டச்சொல்’ என்றார். சிவலிங்கனார் இளம்பூரணர், “பெயர் வினை இடை உரி எனப்பட்ட நான்கு சொல்லுமே இயற்சொல், திரிசொல், திசைச்செல்....வடசொல் எனப்பட்டன; பிறவில்லை” என்றதை நோக்கச் செய்யுளுக்குத் திசைச்சொல்லிலும் வடசொல்லிலும் உள்ள இடைச்சொற்களும் உரிச்சொற்களும் உரியனவாம் என்னும் கருத்து அவர்க்குண்டு போலும் என எண்ணத்தோன்றுகிறது. அதனை நன்னூலார் பிற்காலத்தில் தெளிவுபடுத்தினார். திசை வடசொற்களின் இடையுரிச் சொற்கள் தமிழில் வாரா என்பதற்காகவே அதுவே இயற்சொல் திரிசொல் இயல்பிற் பெயர்வினை என விரண்டாகும் இடையுரி யடுத்து நான்கு மாந்திசை வடசொலணு காவழி. (நன். 270) எனத்திசை வடசொற்களைப் பிரித்துக்கூறினார்.
2. ஏனையவாய்-வினைமுற்று முதலியவாய் |