பக்கம் எண் :

84தொல்காப்பியம்-உரைவளம்

இவற்றைப் பிரிப்பப் பிரியா என்பது என்னையெனின், வெற்பன், பொருப்பன் என்னும் தொடக்கத்து ஒட்டுப்பெயர் வெற்பு+அன், பொருப்பு+அன் எனப்பிரிந்தவழியும், வெற்பு, பொருப்பு என்னும் முதல் நிலை தம் பொருள் இனிது விளக்கும். தமன், எமன் என்பனவற்றைத் தம்+அன், எம்+அன் எனப் பிரிக்கலுறின், தம், எம் முதனிலையாய்ப் பொருள் உணர்த்துவன வாதல் வேண்டும். 1அவை பொருளுணரத்தாமையான், தமன், எமன் என வழங்கியாங்குக் கொள்வ தல்லது பிரிக்கப் படாமையின் அவ்வாறு கூறினார் என்பது, பிறவுமன்ன.

2அஃதேல், தாம், யாம் என்பனவற்றிற்கு முதனிலையாகப் பிரிக்கவே, அவையும் தம்பொருள் உணர்த்தும் எனின், தமன், எமன் என்பன தன்கிளவி, என்கிளவி எனவும், தங்கிளை, எங்கிளை எனவும் முதல்நிலை வகையான் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாதலுடைய ஒருமையுணர்த்துங்கால் தாம் யாம் என்பன பொருந்தாமையின் தான் யான் என்பனவே, முதல் நிலை எனல் வேண்டும். வேண்டவே, இவ்வாறு பிரிப்பின் தமன் எமன் என ஓரொன்றிரண்டு சொல்லாதல்


1. அவை பொருள் உணர்த்தாமையாவது : தமன் என்பது தம்மைச்சார்ந்தவன் என ஒருமையையுணர்த்துகிறது. தம் + அன் எனப்பிரித்தால் தம் என்பது ஒருமையில்லை. அதனால் அதற்குப் பொருள் உணர்த்து மாற்றல் இல்லை.

2. தமன்-தம்மைச்சார்ந்தவன் அதாவது தம்கிளை என்னும் பொருளது. அதுவே தன்னைச் சார்ந்தவன் அதாவது தன்கிளை என்னும் பொருளும் உடையது. இருவகைப் பொருளுடைமையால் தமன் என்பது இரு சொல் எனப்படுமா என்றால் இல்லை ஒரு சொல்லே. தம்கிளை என்னும் போதும் தன்கிளை என்னும்போது தமன் என்றே நிற்றலின் தமன் என்பதை அவ்வாறு பிரித்தல் கூடாது. தம் கிளை என்ற பொருளில் தம்+அன் எனப் பிரிப்பதாயின் தன்கிளை என்ற பொருளில் தன்+அன் எனப்பிரித்தல் வேண்டும். தனன் என்பது சொல் இல்லை. அதனால் தமன் என்பது இரண்டற்கும் பொதுவான பிரிக்கப்படாத ஒரு சொல். இப்படியே பிறவும்.