பக்கம் எண் :

88தொல்காப்பியம்-உரைவளம்

*ஈண்டு இவை வெற்பன், பொருப்பன் போலத் தம், நம், நும், எம் என்பன பிரிந்துநின்று பொருள் உணர்த்திப் பின்வருகின்ற அன், அள், அர் என்பன பொருள் உணர்த்தாது இடைச்சொல்லாயே நிற்றலின் பிரிப்பப் பிரியா என்றார்.

இனி, உம்மையை எச்சப்படுத்திப் பிற ஒட்டுப் பெயர்களும் பிரிப்பப் பிரியா எனப் பொருள்கூறி, இம்பர், உம்பர், இம்மை, உம்மை, எம்மை என்றாற் போல்வன பிறவும், இவ்விடம், உவ்விடம், இப்பிறப்பு, உப்பிறப்பு, எப்பிறப்பு என்னும் பொருள் உணர்த்தி நிற்கும் என்று கொள்க.

வெள்

செய்யுட் குரிய சொல்லும், சொல் தொடுக்குங்காற்படும் விகாரமும் முதலிய செய்யுளொழிபு உணர்த்திய ஆசிரியர், இனி, இச்சூத்திரமுதலாக வழக்கிலக்கணத்தது ஒழிபு கூறுகின்றார்.

இ-ள் : த ந நு எ என்பனவற்றை முதலாக வுடையனவாய்ச் சுற்றம் என்னும் உறவுப் பொருள் உணர்த்திவரும் பெயரும் பிரித்தாற் பிரிந்து நில்லா, எ-று.

கிளைநுதற் பெயராவன உறவுப் பொருள் உணர்த்திவரும் தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர், எமன், எமள், எமர்; தம்மான், தம்மாள், தம்மார்; நம்மான், நம்மாள், நம்மார்; நும்மான், நும்மாள், நும்மார்; எம்மான், எம்மாள், எம்மார் எனவரும்.

வெற்பன் பொருப்பன் எனவரும் ஒட்டுப் பெயர்கள் வெற்பு + அன், பொருப்பு + அன் எனப் பிரிக்குமிடத்து முதல் நிலையும் இறுதி நிலையுமாகப் பிரிந்து நின்று தம் பொருள் உணர்த்துமாறு போன்று கிளை நுதற் பெயராகிய இவை, தம் + அன், எம் + அன் எனப் பிரிப்புழிப் பொருள் உணர்த்தாமையாம் ‘பிரிப்பப் பிரியா’ என்றார்.


* இப்பகுதி விளக்கமும பொருத்தமும் இல்லாதது. வெற்பு + அன் = வெற்பன் என ஆண்பாலில் வருவது போலத் தம் + அன் = தமன் என ஆண்பாலில் வருகிறது. எனவே விகுதிக்குப் பொருள் இல்லை என்பது எப்படிப் பொருந்தும். தமள், தமர் என்பனவும் அன்ன.