பக்கம் எண் :

94தொல்காப்பியம்-உரைவளம்

வெள்

இஃது ஒரு சொல்லடுக்காவன இத்துணைய என்கின்றது.

இ-ள் : இசைநிறையும் அசைநிலையும் பொருள்வேறு பாட்டோடு புணர்வதும் என ஒரு சொல்லடுக்கு அம்மூன்று வகைப்படும், எ-று.

உ-ம் : ‘ஏஎ ஏஎ அம்பல் மொழிந்தனள்’ என்பது இசை நிறை. மற்றோ மற்றோ, அன்றே அன்றே என்பன அசைநிலை - அவன் அவன், வைதேன் வைதேன், உண்டு உண்டு, போம் போம் என்பன முறையே விரைவும், துணிவும், உடன் பாடும், ஒரு தொழில் பலகால் நிகழ்தலும் ஆகிய பொருள் வேறுபாடு உணர்த்தலின் பொருளொடு புணர்தலாம்.

அடுக்கு என்பது ஒரு சொல்லினது விகாரம் எனப்படும். அதனை இரண்டு சொல்லாகக் கொள்ளின் அஃது இரு பொருள் உணர்த்துதல் வேண்டும். அவ்வாறுணர்த்தாமையின் அதனை ஒரு சொல்லெனவே கொள்ளுதல் வேண்டும்.

ஆதி

சொல்லடுக்கு, இசைநிறை, அசைநிலை, பொருள்தரு முறை என மூன்றுவகையாகும்.

ஒஒ ஒஒ உரைப்பது அழகு - இசைநிறை
ஏஏ இதனைக் கேட்டுப் பின் உரை - அசைநிலை
வாழ்க வாழ்க நீடூழிவாழ்க-பொருட்புணர்வு
இசைநிறை - செய்யுள்சீர் இசைபற்றியது.
அசைநிலை - பொருளற்றது.
பொருட்புணர்தல்-கருத்துடைய சொல் மீண்டும் மீண்டும் அடுக்கி வருவது.

தொகை மொழித் தொடர் வகை

406. வேற்றுமைத் தொகையே வுவமத் தொகையே
  வினையின் றொகையே பண்பின் றொகையே
யும்மைத் தொகையே யன்மொழித் தொகையென்
றவ்வா றென்ப தொகைமொழி நிலையே.       (16)