தொகை மொழித் தொடர் வகை சூ. 16 | 97 |
இ-ள் : வேற்றுமைத் தொகை முதலாகத் தொகைச்சொல் ஆறாம், எ-று. வேற்றுமையுருபும் உவமைஉருபும் உம்மையும் வினைச்சொல்லீறும் பண்புச் சொல்லீறும் தொகுதலிற் றொகையாயின வென்பாரும், அவ்வப் பொருள்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலிற் றொகையாயின என்பாரும் என இருதிறத்தர் ஆசிரியர். செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என உருபு தொக்கு ஒரு சொல் நீர்மைப் படாதனவும் தொகையாவான் சேறலின் அவற்றை நீக்குதற்கும்; வேழக் கரும்பு கேழற் பன்றி என்புழித் தொக்கன வில்லை யெனினும் தொகையென வேண்டப்படு மாகலான் அவற்றைத் தழுவுதற்கும், உருபு முதலாயின தொகுதலிற் றொகை யென்பார்க்கும், ஒட்டி ஒரு சொல் நீர்மைப்படுதலும் தொகையிலக்கணம் எனல் வேண்டும்; அதனான் உருபு முதலாயின தொகுதல் எல்லாத் தொகைக் கண்ணும் செல்லுமாறு ஒட்டி ஒருசொல்லாதல் தொகையிலக்கணமாய் முடிதலின் இவ்வாசிரியர்க்கும் இதுவே துணிவெனப்படும் என்பது. அற்றாயின், ‘உருபு தொக வருதலும்’ (சொல். 114) எனவும், ‘வேற்றுமை தொக்க பெயர்வயி னானும்’ (சொல். 418) எனவும், ‘உம்மை தொக்க பெயர்வயி னானும் (சொல். 418) எனவும், ‘உவமை தொக்க பெயர்வயினானும் (சொல். 418) எனவும் ஓதலால் அவை ஆண்டுத் தொக்கன வெனப்படுமன்றோ வெனின், அற்றன்று; ‘அது வென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்’ (சொல். 94) என்புழி அதுவென் உருபு நின்று கெட்டதாயின் நின்ற காலத்துத் திணைவழுவாம். அத்திணை வழு அமைவுடைத்து எனின் விரிக்கின்றுழி நான்காம் உருபு தொடராது அது தன்னையே விரிப்பினும் அமைவுடைத்து; அதனான் முறைப்பொருள் தோன்ற ‘நம்பிமகன்’ என இரண்டு சொல்தொக்கன என்பதே ஆசிரியர் கருத்தெனல் வேண்டும். அதனான் உருபும் உவமையும் உம்மையும் தொகுதலாவது தம் பொருள் ஒட்டிய சொல்லால் தோன்றத் தாம் ஆண்டுப் புலப்படாதே நிற்றலேயாம். அல்லதூஉம் வினைத் தொகை பண்புத்தொகை அன்மொழித் தொகை என்பனவற்றின் கண் வினையும் பண்பும் அன்மொழியும் தொக்கு நில்லாமையானும் அஃதே கருத்தாதல் அறிக. |