பக்கம் எண் :

384தொல்காப்பியம்-உரைவளம்

“இரவு வாரலை யைய விரவுவீ
யகலறை வரிக்குஞ் சாரற்
பகலும் பெறுதியிவ டமென் றோளே”1      (கலி-49)

இது பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது.

“திரைமேற்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல்
விரைமேவு பாக்கம் விளக்காக்-கரைமேல்
விடுவாய்ப் பசும்புற விப்பிகான் முத்தம்
படுவா யிருளகற்றும் பாத்து”2      (திணை-நூற்-48)

இதுவும் அது. இவை வரவுநிலை விலக்கின.

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ
ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” 3       (குறுந்-18)

இது காதன் மிகுதி கூறியது.

‘பிறவும் என்றதனால்,

“கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரு நெடுவரை ததும்பிய வருவி
தண்ணென் முழவி னிமிழிசை காட்டு
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்கனாட நின்னயந்தோள் கண்ணே” 4      (குறுந்-365)

இஃது ‘யான் வரையுந் துணையும் ஆற்றுவளோ’ என்றாற்கு ஆற்றாளென்றது.


1. கருத்து: ஐய! புணர்ச்சி வேண்டி இரவில் வாரற்க. இவள் மென்தோளைப் பலமர்கள் அழகுபடுத்தும் மலைச்சாரலில் பகலிலும் பெறுவாய்.

2. கருத்து: இப்பி கக்கிய முத்துகள் பாக்கத்து இருள்படும் இடம் எல்லாம் அவ்விருளைப் போக்கும்.

3. கருத்து: பக்கம் 319-ல் காண்க.

4.  கருத்து: அருவி முழவுபோல இசைக்கும் பலாமரம் உடைய மலைநாடனே! நீ விரும்பியவள் கண்கள் வளைகழல அழுது நீர் ஒழுகுதல் அடங்காவாம்.