பக்கம் எண் :

பொருளதிகாரம்123

மென்றவாறு. இவற்றுக்கெல்லாம் வினை பயன் மெய் உரு என்னும் நான்குந் 1தலைப்பெய்யுமென்பது.

சிறப்பென்பது, உலகத்துள் இயல்புவகையானன்றி விகாரவகையாற் பெறுஞ் சிறப்பு. நலனென்றது அழகு. காதலென்பது அந்நலனும் வலியும் இல்வழியும் உண்டாக்கியுரைப்பது. வலியென்பது தன்றன்மையானே உள்ளதோர் வலியெனக் கொள்க. இவற்றை நிலைக்களமெனவே இவை பற்றாது உவமம் பிறவாதென்பதாம். தன்மேல் வருகின்ற பகைவனைப், ‘பகைவன் புலிபோலும்’  என்று2அவன் வீரக் குறிப்பு அறியாமற் கூறுங் குறிப்பு இன்மையின் அவ்வுவமைக்குத் தோற்றம் ஆண்டில்லை;3 தன் வினையுவமமாகலிற் றிரியாதாயினுமென்பது.

(4)

[இதுவுமது]

280. கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்.

இது மேற்கூறிய நிலைக்களத்திற்கு ஓர் புறனடை.

இ--ள் :அந்நிலைக்களம் நான்கேயன்றிக் கிழக்கிடு பொருளோடு ஐந்தெனவும்படும் என்றவாறு.

கிழக்கிடு பொருளென்பது, கீழ்ப்படுக்கப்படும் பொருள்.

4“கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே”

(குறுந். 337)

என்புழி, கீழ் வீழ்ந்தன என்பதனைக் கிழக்கு வீழ்ந்தன என்பவாகலின். ஒரு பொருளின் இழிபு கூறுவான் உவமத்தான் இழிபு தோன்றுவித்தலின் அதுவும் நிலைக்களமா மென்றவாறு.


1. தலைப்பெய்தல்--கூடல், நான்குந் தலைப்பெய்யுமெனவே பதினாறாம் என்றபடி.

2. ஒருவன் தன் பகைவனை, அவனுடைய வீரக் குறிப்பை அறிதற்குமுன் பகைவன் புலிபோலும் என்று கூறுங் குறிப்பு இன்மையின் அவ்வுவமைக்குத் தோற்றம் ஆண்டு இல்லை என்பது கருத்து.

3. தன் என்பது தான் என்றிருப்பது நலம். தான் என்றது உவமையை. தன்வினை உவமமாதலிற் றிரியாதாயினும் என்று கண்ணழித்துப் பொருள் கொள்ளினுமமையும். ஆகலின்--இன், நீக்கம்.

4. கிழக்கு வீழ்ந்தன--கீழ் வீழ்ந்தன. என்றது தலையிற்கிளைத்த மெல்லிய மயிர் கீழே தாழ்ந்தன என்றபடி.