பக்கம் எண் :

பொருளதிகாரம்125

“நெருப்பி னன்ன சிறுகட் பன்றி”

(குறுந். 160)

என்பது, முதல் உவமமாகப் பொருள் சினையாகி வந்தது.

“அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட
 குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ”

(கலி. 84)

என்பது, சினையுவமமாக உவமிக்கப்படும் பொருண்முதலாயிற்று.

‘நுதலிய மரபு’ என்றதனால்,

“விசும்பி னன்ன 1சூழ்ச்சி”

(புறம். 2)

என்றக்கால், விசும்பென்பது முதலாதல் கருதி யுணர்தல்வேண்டும்; முதற் சினைப்பகுதி அதற்கு இன்மையினென்பது. இனி,

“வேயமன் றன்று மலையு மன்று”

(கலி. 55)

என்றவழியும், மலைநோக்காது மலையுள்வேயெழும் இடங்கருதி அவ்விடமன்றென்றவாறெனக் கொள்க.

“பூவமன் றன்று சுனையு மன்று”

(கலி. 55)

என்பதற்கும் ஒக்கும்.

உரிய என்னாது ‘உரியவை’ என்றதனால் திணையும் பாலும் மயங்கிவரும் உவமையுங் கொள்ளப்படும். அவை,

“மாரி யானையின் வந்துநின் றனனே”

(குறுந். 161)

என்பது திணை மயங்கிற்று.

 2“கூவற்,
  குராலான் படுதுய ரிரவிற் கண்ட
  வுயர்தினை 3யூமன் போலத்
  துயர்பொறுக் கல்லேன் றோழி நோய்க்கே”

(குறு. 224)

என்பது உயர்திணைப்பான் மயங்கிற்று.

“கடம்பமர் நெடுவே ளன்ன மீளி
 யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்”

(பெரும்பாண். 75)

என்பது, ஒருமை பன்மை மயங்கிற்று.

“இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று”

(அகம். கடவுள்)

என்பது 4அஃறிணைப்பான் மயங்கிற்று; பிறவுமன்ன.


1. சூழ்ச்சி--ஆராய்ச்சி.

2. கூவற்குராலான்--கிணற்றில் வீழ்ந்த குராற்பசு, குராற்பசு--கபிலைப்பசு.

3. ஊமன்--ஆண்பால்.

4. அஃறிணைப்பால் என்றது ஒருமை பன்மையை. எயிறு பன்றிக் கோடுகள். இவை பன்மை.