பக்கம் எண் :

128உவமவியல்

என்றவழி, வருமுலையும் திருமுகமும் ஈண்டு உவமையாகி முகையும் பூவும் பொருளாயின; 1ஆண்டு முலையும் முகமும் உயர்ந்தவாகச் செய்தமையின் அவையே உவமமாயின.

இவை உவமத்தொகையாங்கால் ‘முலைக்கோங்கம்’, ‘முகத் தாமரை’ எனப்படும். இவற்றை வேறு உருவகமென்றும் பிறர் மயங்குப. சிறப்பென்றதனான் ஒப்புமை மாத்திரையன்றித் தான் புனைந்துரைக்கக் கருதிய முலையினையும் முகத்தினையும் உயர்ந்த பொருளாகிய உவமத்தினும் உயர்ந்தவாகச் சிறப்பித் துரைத்தானென்பது. ‘மருளறு சிறப்பின்’ என்றதனான், அங்ஙனஞ் சிறப்பிக்குங்கால் மயக்கந்தீரச் சிறப்பித்தல்வேண்டும். 2அஃது உலகினுள் உயர்ந்ததென்று 3ஒப்ப முடித்த பொருளினையுஞ் சிறப்பித்தற்கு உவமஞ் செய்பவோவெனிற் செய்யாரென்பது; என்னை? ‘முகமொக்குந் தாமரை’ என்றால் முகத்திற்குந் தாமரைக்குஞ் சிறப்புடைமை மயங்கி வாராது; பின்னும் முகத்திற்கே சிறப்பாமென்பது கருத்து. அஃதெனப்பட்டது 4பொருளாகலான் ‘உயர்ந்ததன்மேற்று’ (278) என்னும் விதி அப்பொருட்கு எய்துவிக்க

(6)

[பெருமையும் சிறுமையுமாய உவமைகளும் சிறப்பிற்றீராவாயிற் கொள்ளப்படுமெனல்]

285.பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக்
குறிப்பின் வரூஉ நெறிப்பா டுடைய.

இஃது, உவமத்திற்கு ஆவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.


1. ஆண்டு--பொருள் உவமையாயவிடத்து. செய்தமையின் என்பதில் செய்தமைக்குக் கருத்தா கவி.

2. அஃது--அஃதேல் என்றிருப்பது நலம்.

3. ஒப்ப முடிந்த பொருள்--ஏற்றுக்கொள்ள (அங்கீகரிக்க) முடிந்த பொருள். அஃது உவமை. முலையன்ன கோங்கம் என்றவழிக் கோங்கமுகை இயல்பாகச் சிறந்தது. அதனை முலையோடுவமித்தவழி முலைக்கே சிறப்பாகுமன்றி இயல்பாகச் சிறந்த கோங்கிற்குச் சிறப்பாகாது என்றபடி. முகமொக்குந் தாமரை என்பதற்கும் அவ்வாறே கொள்க. முடித்த--முடிந்த என்றிருப்பது நலம். மாறிக் கூறுங்கால் உவமையாக வரும் முலைக்குச் சிறப்பு ஆக்கிக்கொண்டதன்றி இயல்பன்று என்றபடி.

4. பொருள்--உவமேயம்.