பக்கம் எண் :

பொருளதிகாரம்129

இ--ள் : இறப்ப உயர்வும் இறப்ப இழிவும் உவமிக்குங்கால் இன்னாவாகச் செய்யாது சிறப்புடைமையில் தீராவாகிக் கேட்டார் மனங்கொள்ளுமாற்றான் வருதலை வழக்கு வலியாகவுடைய என்றவாறு.

“அவாப்போ லகன்றத னல்குன்மேற் சான்றோ
 ருசாஅப் போல வுண்டே நுசுப்பு.”

என்றவழி, உலகத்தார் அவாப்போலப் பெரிதாகிய அல்குலெனக் கழிபெரும் பரப்பிற்றாகக் கூறினும் அது சிறப்பிற்றீராக் குறிப்பிற்றாதல் வழக்குண்டாகலின் உடம்படப்படும் என்றவாறு.

“மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப்
 பசுவெண் டிங்க டோன்றி யாங்குக்
1 கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்.”

(குறுந். 129)

என்றவழி, கடல்போன்றது கூந்தலெனவும், கடனடு எழுந்த எண்ணாட் பக்கத்து மதிபோன்றது நுதலெனவுங் கூறினான். அதனாற் கடல்போலும் மயிரென்றதும், பல காவதப் பரப்புடைய மதிபோன்றது நுதலென்றதுங் கழியப் பெரியவாயினும், அது வழக்காதலிற் சிறப்பிற்றீராது மனங்கொள வந்ததெனவேபடும்.

“சுரும்பு 2மூசாச் சுடர்ப்பூங் காந்தள்”

(திருமுரு. 43)

என்பதும் அது.

“சான்றோ

3ருசாஅப் போல வுண்டே நுசுப்பு”

என்றவழியும் நுண்ணுணர்வின் ஆராய்ச்சி ஒருவர்க்கும் புலனாகாததனை ஒக்கும் இடையென்றமையின் அதுவுங் கழியச் சிறிதாக உவமித்தார்.

“யானை யனையவர் நட்பொரீஇ 4நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்”

(நால. 213)

என்பதும் அது. இவையுஞ் (சிறுமையுஞ்) சிறப்பிற்றீராக் குறிப்பின் வந்த 5வழக்காதல் அமைந்தனவென்பது. பிறவு மன்ன.


1. கதுப்பு--முற்பக்க மயிர்.

2. மூசாத--மொய்யாத.

3. உசாஅ--ஆராய்ச்சி. நுண்மைபற்றிய உவமை.

4. நாய் இழிந்ததாயினும் நட்புபற்றிக் கூறலின் சிறப்பிற்றீராது என்றபடி. இவையும் அமைந்தன என இயையும்.

5. வழக்காதலின் என்றிருப்பது நலம்.