‘பல்குறிப்பின’ என்பதனாற் கொள்ளப்படும். இப்பகுதியெல்லாம் புறனடையாற் கொள்வனவற்றிற்கும் ஒக்கும். இச்சொற் பரப்பெல்லாம் நோக்கி, “உவமச் சொல்லே வரம்பிகந் தனவே” என்று ஓதி உரைப்ப; அவை அவ்வச் சொல்லுள் அடங்கு மாற்றான் வரம்பிகந்தனவாகா வென்பது. இனி, ‘பிறவும்’ என்றதனால் ஓதப்பட்டன வருமாறு: “துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று,” (குற. 32) என்பதனுள், துணைப்பவென்பதூஉம் அற்றென்பதூஉம் வந்தன. “குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின்.” (குற. 97--5) என்று அனையவென்பது வந்தது. பிறவுமன்ன. “கயமூழ்கு மகளிர் 1கண்ணின் மானும்.” (குறு. 9) என, இன்வேற்றுமையும் உவமவுருபோடு வந்தது. “குளித்துப் பொருகயலிற் கண்பனி மல்க.” என்பது உவமவுருபின்றி இன்னுருபு 2தன்பொருட்கண்ணும் வந்தது. “தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம்.” என்பது, எனவெனெச்சத்தால் உவமம் வந்தது. 3பிறவுமன்ன இவை எல்லாம் வரைவின்றி நான்குவமமும்பற்றி வருமாறு கண்டுகொள்க. ஐந்தாம் வேற்றுமைப் பொருள் வந்த உவமங்களும் பிறவும் உவமத்தொகை யெனப்படா; தொகைப் படாமையி னென்பது. *அங்ஙனந் தொகைப்பட்ட வழியும் மற்று 4மேலுரிமை கூறுகின்றதாமென்பது.
1. கண்ணின்--இன்னைச்சாரியை என்றுகொண்டு செய்யுள் விகாரத்தால் இரண்டாவது தொகச்சாரியை நின்றதெனலாம். 2. தன்பொருள்--ஒப்புப் பொருள். ஐந்தாம் வேற்றுமைக் குரிய ஒப்புப் பொருள் என்றபடி. 3. பிறவுமென்றது எனவென் னெச்ச முதலியவற்றை. 4. மேலுரிமை கூறுகின்றதாமென்பது என்றது 292-ம் சூத்திரம் நோக்கி. கூறுகின்றது--கூறப்படுகின்றது. கூறுகின்றானாமென்பது என்று மிருந்திருக்கலாம். தொகைப்படல்--உருபுகள் தொகைப்பட்டுவரல். தொகை--தொகுதல். * ஈண்டு வாக்கியம் விடப்பட்டிருத்தல் வேண்டும். |