எனவும் வரும். இவை புறனடையாற் கொண்டனவும் எடுத்தோதியனவும் பொதுவிதியான் வந்தவாறு. (15) [உரு(நிற)வுவம உருபுக ளிவையெனல்] | 291. | போல மறுப்ப வொப்பக் காய்த்த நேர வியப்ப நளிய நந்தவென் றொத்துவரு கிளவி யுருவி னுவமம். |
இது, நான்காம் எண்ணு முறைமைக்கண் நின்ற உருவுவமத்திற்குரிய வாய்பாடு கூறுகின்றது. இ--ள் : இவ்வெட்டும் உருவுவமம் என்றவாறு, அவை:-- “தன்சொல் லுணர்ந்தோர் மேனி பொன்போற் செய்யு மூர்கிழ வோனே.” (ஐங்குறு. 41) எனவும், 1“மணிநிற மறுத்த மலர்ப்பூங் காயா.” எனவும், “ஒண்செங் காந்த ளொக்கு நின்னிறம்.” எனவும், “வெயிலொளி 2காய்ந்த விளங்குமணி யழுத்தின.” எனவும், 3”கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர். (அகம். கடவுள்) எனவும், “தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி.” எனவும், வரும். நளிய நந்த என்பன இக்காலத்து அரியபோலும்; அவை வந்தவழிக் கண்டுகொள்க. இனி, இவைபோல உரியவன்றி உருவுவமத்தின்கண்ணும் பொதுச் சூத்திரத்தான் (286) வருமெனப்பட்ட வாய்பாடு சிறு வரவின வருமாறு.
1. மணி--நீலமணி. 2. காய்த்தமணி என்க. காய்த்த--காயச்செய்த. வெயில் வெப்பத்துக்கும் வெப்பமளித்த என்றபடி. இது உவமையாய் நின்றது. 3. கார்--கார்காலம். |