பக்கம் எண் :

142உவமவியல்

மின்மையானும், மழையின் விளைத்த பயத்தோடு உவமித்தலின் மழையோடு ஒருவனை ஐயஞ்செய்தல் வேண்டுவதின்மையானும், வடிவுகண்டவழி ஐயம் பிறக்குமாகலானும், உருவென்பது குணமாகலாற் 1பொருள் வேற்றுமை அறிந்தவழி ஐயஞ் செல்லா தாகலானும் மெய்க்குரிமை கூறினானென்பது. ஏய்த்தலென்பதூஉம் பொருந்துதலாகலின் வடிவிற்கேற்கும். மருள புரைய ஒட்ட ஒடுங்க என்பனவும் கடுத்தல்போலும் பொருண்மைய; என்னை? மருட்சியும் புரையுணர்வுங் கவர்த்தலைக் காட்டுதலானும், ஒட்ட ஒடுங்க என்பனவும் இரண்டனையும் 2ஒன்றென்னும் பொருண்மையவாகலானுமென்பது. நிகர்த்தலும் அவ்வினப் பொருளென்பதனைக் காட்டுதலின் வடிவிற்கேற்றது. ஓடவென்பதும் ஓடுதற்றொழில் வடிவிற்கல்லதின்மையின் அவ்வடிவிற்கேற்றது. பண்பாயிற் பண்பு நிறப்பண்பு ஓடிற்றெனலாகாமையின்.

இனி, உருவுவம வாய்பாட்டிற்குங் காரணங் கூறுங்கால், போலுமென்பது இடைச்சொல்லாகலானும், 3மரீஇவந்த வினைப் பாற்பட்டதாகலானும், அதற்குக் காரணம் கூறப்படாதென்பது; அஃதேல், அதனை இவ்வெட்டற்கும் முன்பு கூறியதென்னை, பொருளுடையவற்றைப் பிற்கூறியெனின், அதுவும் அன்னவென்பதுபோல மற்றை மூன்று உவமத்தும் பயின்று வருமென்பது எய்துவித்தற்கென்பது. மறுப்ப ஒப்ப என்பன முதலாயினவும் ஒரு காரணமுடையவென்பது ஆசிரியன் பெருவரவினவாக உரிமைப்படுத்துக் கூறினமையின் அறிந்தாம். அல்லதூஉம் ‘மரபிற்றோன்றும்’ என்றதனான் இவையெல்லாம் மரபுபற்றி அறியல்வேண்டும் எனவே தலைச்சங்கத்தார் முதலாயினார் செய்யுட்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தாமன்றே, இவ்வாறு சூத்திரஞ் செய்தலானென்பது.


1. பொன்கடுக்கு மேனி என்பதில் பொன்னும் மேனியுமாகிய பொருள்களின் வேற்றுமை அறிந்தவிடத்து அப்பொருள்களின் குணத்தில் ஐயஞ் செல்லாது. ஆகலின் ஐயம் பொருள்களின் கண்ணேயே (வடிவின்கண்ணேயே) தோன்றும் என்றபடி.

2. ஒன்று-அபேதம்.

3. மரீஇவந்த--தொன்றுதொட்டு வந்த. உவமவியல் 21-ம் சூத்திரம் நோக்குக.