படுதலும் வெல்கையும் 1அதனை எள்ளுதல் 2போல்வான் இழித்து வினையே காட்டுதலின். இனி, விழைய புல்ல மதிப்ப வீழ என்னும் நான்கும் உவமிக்கப்படும் பொருளினை உயர்த்தாமையானும் உவமத்தினை இழித்துக் கூறாமையானும் அவை நான்கும் ஒரு பொருளெனப்பட்டன. இவ்வாற்றாற் பயவுவமையெட்டும் (289) இரண்டாயினவென்பது. மெய்யுவமை இரண்டாங்கால்,--ஐயப் பொருட்கண் நான்கும் துணிபொருட்கண் நான்குமென இரண்டாம். கடுப்ப மருள புரைய ஓட என்னும் நான்கும் ஐயப் பொருளவாகி ஒன்றாம். ஓடவென்பது உவமத்தின்கண்ணும் பொருளின்கண்ணும் ‘உணர்வு கவர்ந்தோடிற்று’ என்னும் பொருள் தோன்றவும் சொல்லின் அதுவும் ஐயமெனப்பட்டதுபோலும். இனி, ஏய்ப்ப ஒட்ட ஒடுங்க நிகர்ப்ப என்னும் நான்கும் ஐயமின்றி உவமையும் பொருளும் ஒன்றென உணர்வு தோன்றும் வாய்பாடாகலின் இவை நான்கும் ஒன்றெனப்பட்டு இவையெட்டும் (290) இரண்டாயின. இனி, உருவின் (291) கண்ணும், போல ஒப்ப நேர நளிய என்னும் நான்கும் மறுதலையின்றிச் சேர்ந்தனவென்று கோடற்கு வாய்பாடாகி வருதலின் அவையும் ஒன்றெனப்பட்டன. “நளியென் கிளவி செறிவு மாகும்.” (தொ. சொ. 323) என்றதனால், அதனொடு சேர்ந்ததென்னும் பொருட்டேயாயிற்று. இனி, மறுப்ப காய்த்த வியப்ப நந்த என்னும் நான்கும் உவமையோடு மறுதலை தோன்றி நிற்கும் பொருளவாகலின் நான்கும் ஒன்றெனப்பட்டு இவையும் இரண்டாயின. நந்துதலென்பது கேடு. வியத்தலென்பது உவமையான் வியக்கத்தக்கது பொரு ளெனவே அதன்கண் அக்குணமின்றென மறுத்தவாறாம். காய்த்தலென்பதூஉம் உவமையைக் காய்ப்பித்தலாகலின் அதுவும் மறுத்தலென்பதன் பொரு ளெனப்பட்டது. இவ்வாறு இவையெல்லாந் தொகுப்ப எட்டாதலும் உண்டென்பது இதன் கருத்து.
1. அதனை--உவமையை. 2. போல்வான்--போலும்படி. இஃது எள்ளுதல்போல்வனவாய் இழிவினையே காட்டலின் என்று மிருந்திருக்கலாம். |