கண்டு தனிநின்று விளையாடும் புதல்வனைக்கொண்டு மகிழ்கின்றாளை, வாயிற்கதவம் மறைந்துநின்ற தலைமகள் நீயும் அம்மகவிற்குத் தாயே காண் என்றவழிக், களவுகண்ட பொருளோடு கையகப்பட்ட கள்வர்போலச் செய்வதறியாது தடுமாறி முகம் வேறுபட்ட நிலைமையை உவமித்துச் 1சிரித்தமையின் நகையுவமமாயிற்று. 2“கலங்கவிழ்த்த3நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்” (யா. வி. ப. 318) என்பது அவலவுவமை; கலங்கவிழ்ந்த நீகாமன்போலப் புலம் பினாளென்றமையின் 4அப்பெயர்த்தாயிற்று. “பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு” (முத்தொ. 88) என்பது, இளிவரலுவமம்; என்னை? தலைமகன்மாட்டு இன்ப விளையாட்டெய்துவார் பலரையுங் கண்டு நெஞ்சு தீரப் புன்கணெய்தித் தனிநின்றும் புகப்பெறாது இளிவந்தமையின் அப்பெயர்த்தாயிற்று. “ஈரத்து ளின்னவை தோன்றி னிழற்கயத்து 5ணீருட் குவளைவெந் தற்று” (கலி. 41) என்பது, மருட்கையுவமம்; என்னை? நிழற்கயத்தின் குவளை வேவனவின்மையின் இஃது அற்புதமாயிற்று. “சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் 6பாம்பகத்துக் கண்ட துடைத்து” (நால. 13.--6) என்பது, அச்சமாகலின் அச்சவுவமை.
1. சிரித்தது--தலைவி. 2. கலம்--தோணி. 3. நாய்கன்--மீகாமன். 4. அப்பெயர்த்தாயிற்று என்றது அவல உவமை என்னும் அப்பெயரை யுடைத்தாயிற்று என்றபடி. 5. ஒன்றை நெருப்பு வேவச்செய்யுமன்றி நீர் வேவச்செய்யாது. செய்யுமாயின் அது அற்புதமாகும். ஆதலின் நீருட் குவளை வெந்தற்று என்றது அற்புதவுவமையாயிற்று என்றபடி. மருட்கையெனினும் அற்புதம் எனினும் அதிசயம் எனினு மொக்கும். முன்னையபோல இதுவும் ‘அப்பெயர்த்தாயிற்று’ என்று மிருந்திருக்கலாம். 6. பாம்பைக் காணுவார்க்கு அச்சமுண்டாதலின் அச்சமென்றார். |