பக்கம் எண் :

148உவமவியல்

“மல்லரை 1மறஞ்சாய்த்த மால்போற்றன் கிளைநாப்பட்
 கல்லுயர் நனஞ்சாரற் கலந்தியலு நாடகேள்”

(கலி. 52)

என்பது, பெருமிதவுவமை.

“கூற்று வெகுண் டன்ன முன்பொடு
 மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே”

(புறம். 42)

என்பது, 2வெகுளியுவமம்.

“பாடிச் சென்ற பரிசிலர் போல
 வுவவினி வாழி தோழி”

(அகம். 65)

என்பது, உவகையுவமை; பிறவுமன்ன.

இவற்றான் எண்வகை மெய்ப்பாடும்பற்றி உவமை எட்டெனப்படுமென்று அறிந்து கூறினான்.

“பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீரா”

(தொ. உவ. 10)

என்புழிப், 3பெற்றாமாகலின் மெய்ப்பாடெட்டன்வழித் தோன்றுமென்னாது ‘மருங்கறிய’ என்றதனாற் பெருமையுஞ் சிறுமையும்பற்றி வருதல் வழிமருங்கெனவும், அவை பற்றாது மெய்ப்பாடெட்டும்பற்றி 4வாளாது உவமை வருதல் செவ்விதெனவுங் கொள்ளப்படும்.

“நீருட் குவளைவெந் தற்று”

(கலி. 41)

என்பது, பெருமைபற்றியது; என்னை? உலகநடை யிறந்ததோர் உவமைகூறி அதனோடு தலைமகன் 5ஈரத்தினை ஒப்பித்தமையின்.

“களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா”3

(அகம், 16)

என்பது, 6தனக்கு நிகராமல் இழித்துரைத்தமையிற் சிறுமை பற்றி வந்ததாம்.


1. மறஞ் சாய்த்தமை வீரத்தாலாதலின் வீரம் என்றார். பெருமிதம்--வீரம்.

2. வெகுளி--கோபம்.

3. செயப்படு பொருள் ‘பெருமையுஞ் சிறுமையும்பற்றி வருதல்’ எனப் பின் வரலின் முன் வாளா பெற்றாமாகலின் என்றார்.

4. வாளாது என்பது ஈண்டு வேண்டியதில்லை.

5. ஈரம்--அன்பு.

6. தனக்கு என்றது தலைவியை.