பக்கம் எண் :

40மெய்ப்பாட்டியல்

மென்னும் முறைமைய வல்லவாகலின் ஈண்டுக் கூறார்; அவை,

“வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே.”

(தொல்-பொ-268)

என்புழிச் சொல்லப்படுமென்பது. இவற்றிற்குச் செய்யுள்:

“விண்ணுயர் விறல்வரைக் 1கவாஅ னொருவன்
 கண்ணி னோக்கிய தல்லது தண்ணென
 வுரைத்தலு மில்லை மாதோ வவனே
 வரைப்பாற் கடவுளு மல்ல னதற்கே
 யோதி முந்துறக் காதொன்று ஞெகிழ
 நிழலவிர் மணிப்பூ ணெஞ்சொடு கழலத்
 துகிலும் பன்முறை நெடிதுநிமிர்ந் தனவே
 நீயறி குவையதன் முதலே
 யாதோ தோழியது கூறுமா றெமக்கே.”

(இ. வி. ப. 532)

என்றது, தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது; இதனுள், ‘ஓதி முந்துற ஞெகிழ’ என்பது கூழை விரித்தல்; ‘காதொன்று ஞெகிழ’ என்பது காதொன்று களைதல்; ‘நிழலவிர் மணிப்பூ ணெஞ்சொடு கழல’ என்பது ஊழணி தைவரல்; ‘நெடிது நிமிர்ந்தன துகிலும் பன்முறை’ என்பது உடைபெயர்த் துடுத்தலாயிற்று. இவை 2பாடாண்கைக்கிளையுள் இக்காலத்துப் பயின்றன. பிறவும் அன்ன.

(14)

[மூன்றாம் பகுதி இத்துணையது எனல்]

263. அல்கு றைவர லணிந்தவை திருத்த
லில்வலி யுறுத்த லிருகையு மெடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்றென மொழிப.

இது, முறையானே மூன்றாவது உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : அல்குறைவரல் முதலாகக் கூறப்பட்டன நான்கும் முன்றாவதெனப்படும் என்றவாறு.

மேலது உடைபெயர்த் துடுத்தலாகலான் அதன்வழித் தோன்றுவது உடை பெரிதும் ஞெகிழ்ந்து காட்டுதலாயிற்று;


1. கவாஅன்--மலைப்பக்கம்.

2. பாடாண்கைக்கிளை--பெண்பாற் கைக்கிளை பற்றி ஒரு ஆண்மகனது வீரம் அழகு முதலியவற்றை புகழ்ந்து பாடுவது.