1அதனைப் பாதுகாத்தலான் அவ் 2வற்றம் மறைக்குங் கையினை ‘அல்குறைவரல்’ என்றானென்பது. அணிந்தவை திருத்தலென்பது, 3கடிசூத்திரமுதலாயின திருத்தல்; அஃது உடை ஞெகிழ்ச்சிபோலப் போற்றிச்செய்வதாகலான் அதனை அல்குறைவரலின்பின் வைத்தான். இல்வலியுறுத்தலென்பது, புணர்ச்சியை வேண்டாதாள் போல்வதோர் வன்மை படைத்துக்கொண்டு செய்தல்; என்னை? இல்லாத வலியை மிகுத்தலென்றமையின் அப்பொருட்டாயிற்று. அல்குறைவரலும் அணிந்தவை திருத்தலுந் தன் வலியின்மை காட்டவும் வலி தோற்றிக்கொண்டு செய்வதாகலின் அதனை இல் வலியுறுத்தலென்று மூன்றாமுறைமைக்கண் வைத்தானென்பது, இனி, 4இற்பிறத்தலான்5அதன் வலி தோற்றுவதெனவுஞ் சொல்லுப; அஃதாவது, 6முற்பிறந்தவற்றிற்கு முன்னே கூறினென்பது. இருகையு மெடுத்தலென்பது, அங்ஙனம் 7படைத்துக் கொண்ட வலியானுந் தடுக்கப்படாது நிறையழிதலிற் கைகள் தாமே முயங்கல் விருப்பத்தான் எழுவன போல்வதோர் குறிப்பு. இந்நான்கும் மேலனவுமெனப் பன்னிரண்டுபகுதியும் புணர்ச்சிக்குமுன் நிகழ்வனவாம்.
1. அதனை--அவ்வுடையின் சோர்வை. 2. அற்றம்--இரகசியத்தானம். அஃது “அற்றமறைத்தலோ புல்லறிவு” என்னுந் தேவர் குறளின் அடியின் உரை நோக்குக. சோர்வுமாம். 3. கடிசூத்திரம் என்பது அரைப்பட்டிகை என்று இக் காலத்து வழங்குவதுபோலும். முதலாயின என்றதனால் மேகலை முதலியனவுங் கொள்ளப்படும். 4. இற்பிறத்தல்--உயர்குடிப் பிறத்தல். 5. அதன்வலி--அவ் விற்பிறப்பின் வலி. இஃது இளம்பூரணர் கருத்தாகலின் அவர் கருத்தையே ஈண்டும் பேராசிரியர் சொல்லுப’ எனக் குறித்திருத்தல் வேண்டும். ஆதலின், இற்பிறத்தலான் அதன்வலி எனக் கண்ணழித்தலே பொருத்தமாம். ஏனைப் பாடம் சிறப்பின்று. 6. முற்பிறந்தவற்றிற்கு முன்னே கூறின் என்பதில் யாதோ பிழையிருத்தல் வேண்டும். 7. படைத்தல்--உண்டாக்கல். என்றது உள்ளதை இல்லது போலக் காட்டல். |