பக்கம் எண் :

42மெய்ப்பாட்டியல்

1‘சொல்லிய’ என்றதனான் இவையெல்லாஞ் சொல்லப்படுவ தல்லது, ஈண்டுச் சொல் நிகழ்தல் வேண்டிலவென்பது. எண்ணு நிலைவகையால் தொகைபெற்ற நான்கென்னும் எழுவாய்க்கு மூன்றென்பது பெயர்ப்பயனிலையாய் வந்தது. இவை நான்குந் தலைமகற்குரியவல்ல; தான் அவற்றுக்கு ஏதுவாவதல்லதென உணர்க.

“ஓதியு நுதலு நீவி யான்றன்
 மாதர் மென்முலை வருடலிற் கலங்கி
 யுள்ளத் துகுநள் போல வல்குலின்
 ஞெகிழ்நூற் கலிங்கமொடு புகுமிட னறியாது
 மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும்
 யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதலி
 னிம்மை யுலகத் தன்றியு நம்மை
 நீளரி நெடுங்கட் பேதையொடு
 கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே.”

(இ. வி. ப. 532)

இஃது இயற்கைப் புணர்ச்சிக்கட் டலைவன் தன்னிலையுரைத்தது. இதனுள் உடம்பும் உள்ளத்துகுவன போன்றனவென்பது அல்குறைவரல்; என்னை? 2அவ் வேறுபாட்டானே 3அற்றப்படுதலின்.

“அல்குலின், ஞெகிழ் 4நூற் கலிங்கம்.”

என்பது அணிந்தவை திருத்தல்; அல்குலின் யாத்த நூலிற்கு ஞெகிழ்ச்சி கூறினமையின்.

“மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும்.”

என்பது, இவ்வலியுறுத்தல்;


1. சொல்லிய--இங்கே சொல்லப்பட்ட என்பது கருத்து. இவையெல்லாம் தலைவிகண் நிகழ்ந்தனவாகச் சொல்லப்படுவதல்லது இவற்றின்கண் தலைவிக்குச் சொன்னிகழ்தல் வேண்டில வென்பது. எனவே இவை தலைவிகண் நிகழ்ந்தனவாகச் சொல்வதல்லது இவை குறித்துத் தலைவிக்குச் சொன்னிகழ்ச்சி இல்லை என்றபடி.

2. அவ்வேறுபாடு--உடம்பின் வேறுபாடு.

3. அற்றப்படுதல்--உடை சோர்வுபடுதல். இஃது அற்றம் படுதலின் என்று மிகுந்திருக்கலாம்.

4. நூல்--ஞாண் (கயிறு). கலிங்கம்--வஸ்திரம். இக்காலத்து உடுக்கும். ‘பாவாடை’ போன்றதுபோலும்.